Maharashtra Elections Exit Poll Results : ஆட்சியை தக்கவைக்கும் பாஜக?சோகத்தில் ராகுல் காந்தி!
மஹாராஸ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மஹாராஸ்டிராவில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு களமிறங்கியுள்ளது. அதேபோல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து களம் கண்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளதால் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. இந்நிலையில் ஏபிபி மெட்ரிஸ் கருத்துகணிப்புகளின்படி பாஜக கூட்டணி 150 முதல் 170 இடங்களை வெல்லும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 110 முதல் 130 இடங்களை வெல்லும் எனவும், இதர கட்சிகள் 8 முதல் 10 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் CNN வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 154 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களையும் பிற கட்சிகள் 6 இடங்களையும் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ரிபப்ளிக் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி பாஜக கூட்டணி 137 முதல் 157 இடங்கள் வரை கைப்பற்றும் எனவும் காங்கிரஸ் கூட்டணி 126 - 146 கைப்பற்றும் எனவும் பிற கட்சிகள் 2 - 8 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஸ்டிராவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளதால் அக்கட்சியினர் குஷியில் உள்ளனர்.