INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?
மகாராஷ்டிரா தேர்தலில் ஏக் நாத் ஷிண்டேவுக்கும், உத்தவ் தாக்கரேவுக்கும் இடையிலான போட்டி ஆட்சி ரீதியாக மட்டுமல்லாமல் கட்சி ரீதியாகவும் சிவசேனாவுக்கு முக்கிய தேர்தலாக இருக்கும். மக்களவை தேர்தலை போலவே சட்டமன்ற தேர்தலும் இந்தியா கூட்டணிக்கு வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 288 தொகுதிகளை கொண்ட இந்த சட்டமன்றத்திற்கு, நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே vs ஏக் நாத் ஷிண்டே என இரண்டாக பிரிந்துள்ளது சிவசேனா கட்சி. அதேபோல் தேசியவாத காங்கிரஸும் சரத் பவார் vs அஜித் பவார் என இரண்டாக உடைந்துள்ளது.
2019-ல் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சியில் அமர்ந்த பிறகு அக்கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்ஏல்ஏக்களுடன் சேர்ந்தூ பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னர் பாஜகவுடன் கைகோர்த்த ஏக் நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதேபோல் சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்த தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவாரும் பாஜகவுடன் இணைந்து துணை முதலமைச்சர் ஆனார். பாஜகவினர் பணம் கொடுத்து எல்.எல்.ஏக்களை பேரம் பேசியதாக புகார் எழுந்தது. தற்போது மகாராஷ்டிராவில் ஏக் நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா, அஜித் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்தூ ஆட்சி செய்து வருகின்றன.
மற்றொரு பக்கம் காங்கிரஸ், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி கூட்டணி அமைத்துள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், மொத்தமுள்ள 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 30 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவிற்கு அதிர்ச்சியை கொடுத்து. குறிப்பாக உத்தவ்தாக்கரே சிவசேனா ஒன்பது தொகுதிகளிலும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் எட்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என கட்சியினர் அடித்து சொல்கின்றனர். ஏற்கனவே கட்சியை இழந்து நிற்கும் உத்தவ் தாக்கரே சட்டமன்ற தேர்தலில் தனது பவரை காட்ட முடிவெடுத்துள்ளார். அதுவும் மக்களவைத் தேர்தல் மூலம் தொண்டர்களின் பலம் தங்களுக்கு இருப்பதாக காட்டிய உத்தர் தாக்கரேவும் சரத் பாவரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் கட்சி ரீதியாகவும் தங்கள் பலத்தை நிரூபித்து விடலாம் என்ற முடிவில் இருக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி மீது பல்வேறு அதிருப்திகள் நிலவுவதாகவே கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, கடந்த சில மாதங்களாகவே வாக்காளர்களை கவரும் விதமான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாக சொல்கின்றனர். இருப்பினும் மராத்திய இடஒதுக்கீடு, அண்மையில் ஆளும் கூட்டணியை சேர்ந்த அரசியல் தலைவரான் சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டது போன்றவை அவர்களுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மக்களவை தேர்தல் வேகத்திலேயே இருந்தால் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.