Madurai Mayor | வரி விதிப்பில் முறைகேடு PTR ஆதரவு மேயர் ராஜினாமா ஓங்கும் மூர்த்தியின் கை

Continues below advertisement

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா செய்துள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்ததன் பின்னணி வெளியாகியுள்ளது. இதனிடையே, அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக இருந்து வந்த மேயர் இந்திராணி ராஜினாமா செய்த நிலையில் அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் பணியாற்றியபோது மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் நிறுவனங்கள் ,மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்தியபோது 2022-2023-ஆம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை வரி வசூலில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த வரி முறைகேடு முழுவதும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி குறைப்பு செய்தது ஆய்வில் தெரிய வந்த நிலையில் இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினருக்கு ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இந்த புகாரின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வரி குறைப்பு செய்வதற்காக அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தியதும் தெரியவந்தது .

இது குறித்து தற்போதைய மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த புகாரினை தீவிரமாக விசாரணை நடத்தி முறைகேடுகளை வெளிக்கொண்டு வர வேண்டுமென கூறியிருந்தார். இந்த  வழக்கானது மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. மேலும் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.


இந்த நிலையில் மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில்  சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுபடி டிஐஜி அபினவ்குமார் தலைமையிலான விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடைபெற்றது.  வரி முறைகேடு தொடர்பாக முதல் குற்றவாளியாக மாநகராட்சி மேயர் கணவர் பொன்வசந்த் ,மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், வரிவிதிப்புகுழு தலைவரின் கணவர் கண்ணன், செந்தில்பாண்டியன்,ரவிச்சந்திரன், ஜமால் நஜிம், பாலமுருகன், கருணாகரன், ரவி, முகம்மதுநூர், செந்தில்குமரன், ரெங்கராஜன், கார்த்திக் , சகா உசேன், ராஜேஸ்குமார், சதீஸ், தனசேகரன், உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டு மேயரின் கணவர் பொன்வசந்த் உள்ளிட்ட சிலர் ஜாமினில் உள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி கணவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேயர் இந்திராணியின் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்பி வந்தனர். வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது முதலமைச்சர் முடிவு எடுப்பார் என பதில் அளித்தார். இந்நிலையில் மேயர் இந்திராணி தனது குடும்ப சூழல் காரணமாக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்

இதை எடுத்து மேயர் இந்திராணி வழங்கிய ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக துணை மேயர் நாகராஜன் தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆணையாளர் சித்ரா விஜயன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சி 150 கோடி முறைகேடு விவகாரத்தில் மண்டல தலைவர்கள் , குழு தலைவர்களை தொடர்ந்து தற்போது மேயரும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடதக்கது. மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடு  விவாகரத்தில் மேயர் ராஜினாமா செய்த நிலையில் புதிய மேயர் தேர்வு செய்யப்படுவாரா? இல்லையெனில் துணை மேயர் பொறுப்பு மேயராக  நியமிக்கப்படுவாரா? அல்லது ஆணையாளர் மூலமாக மாநகராட்சி நிர்வாகம் நடைபெறுமா என பல்வேறு கேள்விகளும்  எழுந்துள்ளது.

ஏற்கனவே மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில் புதியதாக மேயர் தேர்வு செய்வதில் திமுக தலைமைக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது இருந்த போதிலும் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக இருந்து வந்த மேயர் இந்திராணி ராஜினாமா செய்த நிலையில் அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஏற்கனவே ராஜினாமா செய்த மண்டலம் 1ன் மண்டல தலைவரான வாசுகி சசிகுமாருக்கு மேயர் பதவி வழங்குவதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola