“ஒரு வேலையும் செய்ய மாட்றீங்க 3 வருஷமா என்ன பண்றீங்க?”அதிகாரிகளை டோஸ் விட்ட மா.சு | Ma.Subramanian
கண்ணமங்கலம் ஆரம்பச் சுகாதாரம் நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்து இருக்குனு போர்டு வைக்க சொன்னேன்ல.. ஏன் வைக்கல..? ஒரு சின்ன வேலை இது கூட ஏன் செய்ய மாட்டிங்குறீங்க..? என அதிகாரிகளை கடிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் ஆரம்பச் சுகாதாரம் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், திடீரெனத் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்ணமங்கலம் சுகாதார நிலையத்திற்கு வருகை புரிந்து ஆரம்பச் சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நோயாளிகளிடம் சிகிச்சை பெற்றீர்களா எனக் கேள்வி எழுப்ப, மருத்துவமனையில் சிறப்பாகக் கவனிக்கப்படுவதாகத் தெரிவித்தனர். மேலும் நோயாளிகளின் சிகிச்சை குறித்து தகவல் பலகை நோய் குறித்து ஏன் வைக்கவில்லை என அதிகாரிகளிடம் கடிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து ஆரம்பச் சுகாதார நிலையத்தில் உள்ள மருந்து இருப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரம் குறித்துப் பார்வையிட்டார்.
அப்போது பாம்புக் கடி மற்றும் நாய்க் கடிக்கு அரசு மருத்துவமனையில் தகவல் பலகை ஏன் வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். உடனே கண்ணமங்கலம் சுகாதாரத் துறை அதிகாரிக்கு தொலைப்பேசி செய்த அமைச்சர் மா. சுப்ரமணியன் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருகிறீர்கள்.. எத்தனை ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளோம். நான்கு வருடங்களுக்கு மேலாக அரசு சொல்லிக் கொண்டு வருகிறது பாம்புக் கடி மற்றும் நாய்க் கடிக்கு மருந்து பலகையை மருத்துவமனையில் வைக்கச் சொல்லி..
ஆனால் அதைக் கேட்கவில்லை.. பாதிக்கப்பட்ட மக்கள் எப்படி மருத்துவமனைக்கு வருவார்கள்? எப்படி அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் மக்களுக்கு அரசு ஆரம்பச் சுகாதார நிலையில் பாம்புக் கடி மற்றும் நாய்க் கடிக்கு மருந்து உள்ளது எப்படித் தெரியும்.. அறிவிப்புப் பலகை வைத்தால் தானே தெரியும் என்று சுகாதாரத் துறை அதிகாரியைச் சரமாரியாகக் கேள்விகளால் துளைத்தார் அமைச்சர் மா. சுப்ரமணியன். தொடர்ந்து மாலைக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்க உத்தரவு பிறப்பித்தார்.