Chandrababu and Nitish kumar | சந்திரபாபு நாயுடு vs நிதிஷ் குமார்..சபாநாயகர் CHAIR-க்கு போட்டி!
மக்களவையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில், தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஐக்கிய ஜனதா தளத்திற்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது, இதனால் நடுவில் மாட்டிக்கொண்ட பாஜக செய்வதறியாது முழித்துக்கொண்டிருக்கிறது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், 240 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்ற நிலையில் தனி பெரும்பான்மை கிடைக்காததால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தின் 16 எம்பிக்கள் ஆதரவுடனும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் 12 எம்பிக்கள் ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் மோடி கேபினேட் 3.0 விலும் இந்த இரண்டும் கட்சிகளுக்கும் தலா இரண்டு அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டன.
இந்த சூழலில் தான் அடுத்த கட்டமாக மக்களவையின் சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் ரேஸ் NDA கூட்டணிக்குள் வேகம் எடுத்துள்ளது.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை பொறுத்த அளவில் தங்களுக்கு மக்களவை தலைவர் பதவி கிடைக்கவில்லை ஏனினும், அது தெலுங்கு தேசம் கட்சிக்கு கிடைத்துவிட கூடாது. அப்படி நடந்தால் அது நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசத்தின் கை ஓங்கிவிடும், மேலும் NDA கூட்டணி கட்சிகளின் முக்கிய துவத்தில் நாம் பாஜக, தெலுங்கு தேசத்திற்கு அடுத்த படியாக 3வது கட்சியாக போய்விடுவோம் என்று நினைக்கிறது.
அதனால் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் “பாஜக சார்பில் பரிந்துரை செய்பவரை மக்களவை தலைவராக தேர்ந்தெடுக்க நாங்கள் முழு ஆதரவு கொடுப்போம்” என சொல்லி வருகிறார்கள்.
பாஜகவை பொறுத்தவரை மீண்டும் ஓம் பிர்லாவை மக்களவை தலைவராக தேர்ந்தெடுக்க விரும்புகிறது. ஆனால் அங்கே தான் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் முட்டுக்கட்டை போடுகிறது.
மக்களவை சபாநாயகர் பதவியை ஆரம்பம் முதலே சந்திரபாபு நாயுடு டார்கெட் செய்துவரும் நிலையில் “மக்களவை தலைவர் பதவி தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி ஆலோசித்து பாஜக முடிவெடுக்க வேண்டும், அதன் பிறகே எங்கள் ஆதரவை கொடுப்போம்” என்று தெலுங்கு தேசம் சொல்லிவருகிறது.
இந்நிலையில் 18வது மக்களவை வருகிற ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது, மூத்த எம்பிக்கள் யாரேனும் தற்காலிக தலைவராக அமர்ந்து புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமானம் செய்து வைப்பார்கள்.
அதன் பின் ஜுன் 26ம் தேதி புதிய மக்களவை தலைவருக்கான தேர்தல் நடைப்பெற இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் இரண்டுக்கும் நடுவே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், இந்த சூழலை பயண்படுத்தி சபாநாயகர் பதவியை கைப்பற்ற நினைக்கிறது INDIA கூட்டணி.
குறைந்தபட்சம் மக்களவை துணை தலைவர் பதவியையாவது பெற்று விட வேண்டும் என்று நினைக்கிறது காங்கிரஸ். அதற்கான காய்களையும் நகர்த்த தொடங்கிவிட்டது.
மக்களவை துணை தலைவர் பதவி வழக்கமாக எதிர்கட்சிக்கும் வழங்கபடுவது மரபு.
ஆனால் தெலுங்கு தேசத்தை சமாளிக்க, அந்த மரபை மீறி துணை தலைவர் பதவியை தெலுங்கு தேசத்திடம் கொடுத்துவிட்டு, தலைவர் பதவியை எடுத்துக்கொள்ள தீவிரமாக முயன்று வருகிறது பாஜக. இந்நிலையில் மக்களவை தலைவரை தேர்ந்தெடுக்கும் ரேஸ் உச்சக்கட்டத்தில் சென்று வரும் நிலையில், யாருக்கு இதில் ஜாக்பாட் அடிக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.