Komiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?

கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கு ஆதாரம் இருக்கிறது எனவும் ஐஐடி காமகோடி அடித்து கூறி இருக்கும் நிலையில் கோமியத்தில் 14 பாக்டீரியாக்கள் உள்ளது எனும் ஆய்வு முடிவை மறுக்கிறாரா என திமுக MLA மனோ தங்கராஜ் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி பண்டிகையின்போது நான் பஞ்சகவ்யம் உண்பது வழக்கம்.  பஞ்சகவ்யத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. மாட்டுச் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவை கலந்ததே பஞ்சகவ்யம். கோமியம் தொடர்பாக சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். கோமியத்தை குடித்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி குறித்து நான் படிக்கவில்லை. அமெரிக்காவில் வெளியான இதழ்களில் பஞ்சகவ்யத்தில் எதிர்ப்பு சக்தி உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.  

கோமியம் குடித்ததால் தந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் குணமானது என்றும், கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது எனவும் காமகோடி பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மருத்துவர் ரவீந்தர் கூறுகையில், மாட்டுச் சாணம் சாப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம், மக்களிடம் அதை ஏன் சொல்ல வேண்டும்? கோமியத்தில் எந்தவிதமான மருத்துவ குணங்களும் இல்லை. ஆய்வுகள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிவியல் உண்மைகளை மறைத்து தவறான தகவலை பரப்புகிறார்கள் எனத் தெரிவித்தார். 

திமுக MLA மனோ தங்கராஜ் தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வில், மாட்டின் சிறுநீரில் மனிதருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக உறுதிப்பட தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவை IIT இயக்குனர் காமகோடி அவர்கள் மறுக்கிறாரா?மாடு மட்டுமல்ல மனிதன், ஆடு, எருமை, ஒட்டகம் உட்பட பல விலங்குகளின் எச்சில், வியர்வை, சிறுநீர் கழிவுகளிலும் கூட சில நல்லகூறுகள் இருப்பதாகத்தான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் பல தீங்கு விளைவிக்கக்கூடிய கூறுகளும் அவற்றில் அடங்கி இருக்கின்றன என்று தான் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்..

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola