”செந்தில் பாலாஜி மேல தப்பு” தவெக நிர்வாகி தற்கொலை! கடிதத்தில் இருந்தது என்ன?
கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என கடிதம் எழுதிவைத்து விட்டு தவெக நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் சதி நடந்துள்ளதாக நீதிமன்றத்தை நாடியுள்ளது தவெக. சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த சம்பவத்தின் மிகப்பெரிய சதி வலை பின்னப்பட்டுள்ளது என தவெக வழக்கறிஞர் அறிவழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தநிலையில் கரூர் சம்பவம் தொடர்பான மன உளைச்சலால் தவெக நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள விற்பட்டு ஊராட்சி தவெக கிளை செயலாளராக இருந்தவர் 50 வயதான ஐய்யப்பன். இவர் குடும்பத்துடன் சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். சொந்த ஊரான விற்பட்டு கிராமத்தில் தாய் தனியாக வாசித்து வருவதால் இருபது நாட்களுக்கு ஒருமுறை அங்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் 2 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு வந்த ஐயப்பன், கரூர் விவகாரத்தில் விஜய்க்கு எதிராக வந்த விமர்சனங்களை பார்த்து மன உளைச்சலில் இருந்ததாக சொல்கின்றனர்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஐயப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் வீட்டிற்கு வந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உடலை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் சட்டை பையில் இருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில் கரூர் மாவட்டத்தில் விஜய் வருகையின் போது போதிய போலிஸ் பாதுகாப்பு இல்லை. விஜய் ரசிகர்கள் நன்றாக வேலை செய்தார்கள். செந்தில் பாலாஜி அவர்கள் நூதன முறையில் நெருக்கடி கொடுத்து, செந்தில் பாலாஜி மூலமாக இந்த துயர சம்பவம் நடைபெற்றது. போலீஸும் இதற்கு உடந்தை. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். என் உயிர் ஐயப்பன். தமிழக வெற்றிக் கழக செயலாளர், த.வெ.க கிளை செயலாளர் என எழுதப்பட்டுள்ளது.
இது அவர் எழுதிய கடிதம் தானா என்பதை தெரிந்து கொள்ள ஐய்யப்பன் எழுதிய டைரி மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலை செய்துக்கொண்ட ஐய்யப்பன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய பிறகே தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.