Karti Chidambaram Vs Arun Nehru : வம்பிழுத்த கார்த்தி சிதம்பரம்!அருண் நேரு பதிலடி!முற்றும் மோதல்!
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியான நிலையில், தற்போது காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் திமுக எம்பி அருண் நேரு ஆகியோரிடையே ட்விட்டரில் வார்த்தைப்போர் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ளது போலவே திருச்சியிலும் மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டம் தொடர்பான பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் அதிகாரிகள் ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியானது நடைபெற்று வந்தது. இதில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த பணிகளுக்கு சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என விரிவான திட்ட அறிக்கையில் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சி மெட்ரோ திட்டம் குறித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்தார். அதில் அவர்,திருச்சிக்கு மெட்ரோ தேவையில்லை. இதுபோன்று நடைமுறைக்கு அப்பாற்பட்ட தேவையில்லாத திட்டங்களை கைவிட்டுவிட்டு சாலை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
கார்த்தி சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு தற்போது பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் கே என் நேருவின் மகனுமான அருண் நேரு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,
கார்த்தி, நான் பெரம்பலூர் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திருச்சியில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகிறது.
திருச்சியில் மெட்ரோ வருவதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருச்சி மெட்ரோ செயல்படுத்தப்பட்டால், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கு செல்வபவர்கள் என பலரும் பயனடைவார்கள் . திருச்சி வளர்ந்து வரும் மாவட்டம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். திருச்சியை பொறுத்தவரையில் சாலைகள் வருங்கால தேவைகளை பூர்த்தி செய்யாது. இது போன்ற மெட்ரோ அமைக்கப்பட்டால் மக்களுக்கு உதவியாக இருக்கும் என கூறியுள்ளார். அருண் நேருவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.’
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் அடுத்ததாக சென்னை மாநகராட்சியிடம் கைவைத்துள்ளார். கூவம் சுத்தப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் வெள்ளை அறிக்கை தேவை! சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை அதனை வெளியிட வேண்டும் என எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நிகழ்வுகள் திமுக காங்கிரஸ் இடையே புகைச்சல்கள் உள்ளதா என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைகிறது