”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE
பெண் அமைச்சரை மோசமாக பேசியதாக பாஜக நிர்வாகி சி.டி.ரவியை சட்டமன்றத்திலேயே வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு தலையில் கட்டுடன் போலீசாரை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் சி.டி.ரவி.
அமைச்சர் அமித்ஷா அம்பேதக்ர் பற்றி பேசியது நாடு முழுவதும் புயலை கிளப்பியுள்ளது. நாடாளுமன்றம் மட்டுமில்லாமல் கர்நாடக சட்டமன்றத்திலும் நேற்று ஆளும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் இறங்கியது. அம்பேத்கர் படத்தை தங்கள் இருக்கைகளில் வைத்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். அப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் பெண் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை மேலவை உறுப்பினரான பாஜக சி.டி.ரவி மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், ஆபாசமான செய்கைகள் மூலம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அமைச்சர் அளித்த புகாரின் அடிப்படையில் சிடி ரவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து போலீஸார் பாஜக கர்நாடகா மேலவை உறுப்பினர் சி.டி.ரவியை கர்நாடகா சட்டமன்ற வளாகத்திலேயே வைத்து கைது செய்தனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்ட சி.டி.ரவி, ‘இரவு 8 மணியளவில் கானாபுரா காவல் நிலையத்திற்கு போலீஸார் என்னை அழைத்து வந்தனர். எதற்காக என்னை கைது செய்தார்கள் என்பதை சொல்லவில்லை. என் மீது FIR கூட பதிவு செய்யவில்லை. எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு ஆளும் காங்கிரஸ் தான் பொறுப்பு. பொய் வழக்கு பதிவு செய்து என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து 3 மணி நேரமாகியும் காரணம் சொல்லாமல் இருக்கிறார்கள். னக்கு ஏதாவது நேர்ந்தால் காவல்துறை, டி.கே.சிவகுமார், லட்சுமி ஹெப்பால்கர் தான் பொறுப்பு. அவர்கள் என்னை ஒரு குற்றவாளி போல நடத்துகிறார்கள், அது எனக்கு சந்தேகத்தை கொடுக்கிறது. நான் அமைச்சராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளேன். எமர்ஜென்சி காலத்தில் நடந்து கொண்டதை போல நடந்து கொள்கிறார்கள்” என புகார் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அதிகாலை 3 மணிக்கு சி.டி,ரவியை பெல்காவி மாவட்டத்திற்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது தலையில் கட்டுடன் இருந்த சி.டி.ரவி சாலையிலேயே உட்கார்ந்து தன்னை கைது செய்து காவல்துறையினர் மற்றும் ஆளும் காங்கிரஸுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிகாலையிலேயே அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.