Kanimozhi on Marina Air show : மெரினா உயிரிழப்பு கனிமொழி பகீர் REACTION!யாரை சாடுகிறார்?

Continues below advertisement

சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை சாகசத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மாநில அரசின் நிர்வாகத்தை விமர்சித்துள்ள நிலையில் இச்சூழலில், சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளது  திமுக அரசையே மறைமுகமாக விமர்சித்துள்ளாரா? என அரசியல் வட்டாரத்தில் விவாதமாக மாறியுள்ளது.

இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர். லட்சக்கணக்கான மக்கள் திரண்டதில் பல பேருக்கு வாந்தி , மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி பிற்பகல் ஒரு மணிக்கு முடிவுக்கு வந்த போது , கடற்கரையில் குவிந்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றனர். இதனால், அந்த பகுதியில் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெரினாவை ஒட்டியுள்ள காமராஜர் சாலைக்கு இணையாகச் செல்லும் அண்ணா சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் சரியாகச் செய்யப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாதுகாப்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள் முறையாகச் செய்யப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்த நிகழ்ச்சியைக் காண வந்த பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தி.மு.க., தலைமையிலான மாநில அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும் என மீண்டும் திமுக தலைமையிலான அரசை நோக்கி விமர்சனத்தை விசிக துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா வைத்திருந்தார். 

இதுகுறித்து வான் படை சாகச நிகழ்வு குறித்து கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் சமாளிக்க முடியாத கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதில் அவர் “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.

இதில் சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சமாளிக்க முடியாத கூட்டங்கள் என்பதை மறைமுகமாக திமுக அரசையே விமர்சித்துள்ளாரா? அல்லது சமாளிக்க முடியாத கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளாரா என கனிமொழியின் இந்த பதிவு விவாதாமாக மாறியுள்ளது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram