Kanimozhi in Kavin House : ’’கடும் நடவடிக்கை எடுப்போம்’’கவின் வீட்டில் கனிமொழி தாய்க்கு கொடுத்த வாக்கு
திருநெல்வேலியில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின்
வீட்டிற்கு தூத்துக்குடி எம்பி கனிமொழி நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்த மாற்று சமூக பெண்ணை காதலித்ததாக கூறி அந்த பெண்ணின் தம்பி தூத்துக்குடியை சேர்ந்த ஐடி ஊழியர் கவின்குமாரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தின் ஊழியராக பணியாற்றி வருபவர் கவின்குமார். இவரும் திருநெல்வேலியை சேர்ந்த போலீஸ் தம்பதியின் மகள் சுபாசினி என்பவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. சுபாஷினி நெல்லையில் சித்த மருத்துவராக நெல்லையில் பணியாற்றி வருகிறார்.
கவின்குமார் சுபாஷினியும் பள்ளி நாட்களில் இருந்தே பழகி வருவதாக கூறப்படும் நிலையில், சில நாட்களாகவே இவர்களுக்கிடையே திருமண பேச்சு எழுந்துள்ளது. கவின்குமார் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் சுபாஷினியில் பெற்றோர் இவர்களது காதலுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். எனினும் இருவரும் தொடர்ந்து பழகி வந்தது அவர்களை கோபத்திற்குள்ளாக்கி உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று கவின்குமார் தனது தாத்தாவை அழைத்துக்கொண்டு சுபாஷினி பணிபுரியும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சுபாஷினியின் தம்பி சுர்ஜித் கவின்குமாரை தனிமையில் பேச அழைத்து சென்ற நிலையில், அவரது கண்ணில் மிளகாய்த்தூள் தூவி சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.
இதனையடுத்து சுர்ஜித்தே காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலும் இது திட்டமிட்ட படுகொலை என்றும் சுபாஷினியும் பெற்றோருக்கும் இந்த கொலையில் சம்பந்தம் உள்ளது எனவும் புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் தம்பதியான சுபாஷினியின் பெற்றோரை பணியிடை நீக்கம் செய்த நிலையில், அவரது தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கவினின் வீட்டிற்கு திமுக எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் கே என் நேரு ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த வீடியோ வெளியாகி உள்ளது.