Kangana Ranaut : கங்கனாவை அலறவிட்டவர்! யார் இந்த குல்விந்தர் கவுர்?
CISF பெண் காவலர் பாஜக எம்.பி கங்கனாவில் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சண்டிகர் விமான நிலையத்தில் CISF பெண் காவலரான குல்விந்தர் கவுர் பாஜக எம்.பி கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்ததாக புகார் எழுந்தது. கங்கனா ரணாவத் சண்டிகரில் இருந்து டெல்லிக்கு திரும்பி செல்லும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என சொன்ன ஆத்திரத்தில் பெண் காவலர் கங்கனாவை அறைந்துள்ளார். மேலும் விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் பணம் வாங்கி கொண்டு கலந்து கொள்வதாக கங்கனா கூறிய நிலையில், தனது அம்மாவும் அதே போராட்டத்தில்தான் கலந்து கொண்டார் என பெண் காவலர் ஆத்திரத்துடன் பேசியுள்ளார்.
பெண் காவலர் தன்னை அறைந்தது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் கங்கனா ரனாவத் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த CISF பெண் காவலர் குல்விந்தர் கவுரை தொழில் பாதுகாப்புப்படை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு எதிரான விசாரணையும் நடந்து வருகிறது.
குல்விந்தர் கவுர் பஞ்சாப் மாநிலத்தின் சுல்தான்பூர் லோதியை சேர்ந்தவர். 35 வயதான அவர், 2009ம் ஆண்டு CISF ல் சேர்ந்துள்ளார். 2021ம் ஆண்டு முதல் சண்டிகர் விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். CISF ல் உள்ள அவரது கணவரும் அதே விமான நிலையத்திலேயே பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் என்ற விவசாய சங்கத்தின் அமைப்பு செயலாளராக இருக்கிறார்.
விவசாய பின்னணியை கொண்ட இவரது குடும்பத்தினர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு முன்பு வரை குல்விந்தர் கவுர் மீது எந்த புகாரும் இல்லை என கூறப்படுகிறது.