Jothimani | "என்ன பண்றோம்னு பாருங்க.. கையை நீட்டி மிரட்டிய ஜோதிமணி” அமைச்சர் வெளியிட்ட வீடியோ
ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் சபாநாயகர் அறைக்கு சென்று பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அமைச்சர் கிரண் ரிஜிஜு.
5 மணிக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் கிரண் ரிஜிஜு - ஜோதிமணி
பிப்ரவரி 4ம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்ற திட்டமிடப்பட்ட நிலையில், அவர் வராததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பிக்கள் பிரதமர் இருக்கைக்கு சென்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததால் தான் பிரதமரை நாடாளுமன்றத்திற்கு வர வேண்டாம் சொன்னதாக பேசியிருந்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. அதற்கு ஏற்ற மாதிரியான சம்பவத்தையும் நான் பார்த்தேன். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் அது நாட்டின் ஜனநாயகத்தையே உடைத்துவிடும் என சொல்லியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
பிரதமர் மோடி உரை நிகழ்த்தவிருந்த நாளான பிப்ரவரி 4ம் தேதி, காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் பிரதமரின் இருக்கையை சுற்றிவளைத்து போராட்டம் செய்ததை சுட்டிக்காட்டி சபாநாயகர் பேசியிருந்தார். இதனையடுத்து காங்கிரஸ் எம்.பிக்கள் பிரதமர் இருக்கைக்கு சென்று பேனருடன் நிற்கும் வீடியோவை வெளியிட்டார் அமைச்சர் கிரண் ரிஜிஜு.
இந்தநிலையில் ஜோதிமணி உள்ளிட்ட 20-25 காங்கிரஸ் எம்.பிக்கள் சபாநாயகர் அறைக்கு சென்று பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் கிரண் ரிஜிஜு. விவாதத்தையும், ஆலோசனையையும் தான் பாஜக ஊக்குவிக்குமே தவிர இதுமாதிரியான மிரட்டல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.























