Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!
நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தொழிலதிபர் ஜாா்ஜ் சோரஸுக்கும், சில அமெரிக்க நிறுவனங்களுக்கும் ஆதரவாக செயல்பட்டுக் கொண்டு, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கூறி வருவதாக பாஜக தொடா்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மறுபுறம் அதானி விவகாரம் பாஜக பதில் சொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த வேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மோதி வருகின்றனர்.
ஆனால், மாநிலங்களவைத் தலைவா் ஜக்தீப் தன்கா் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே பேசுவதற்கு வாய்ப்பு தருவதாகவும், ஆளும்தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க கூட எதிா்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதனால் மாநிலங்களவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் சில நாட்களுக்கு முன் நோட்டீஸ் அளித்தன. இதன் மீது விவாதம் நடத்தக்கோரி எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை முடங்கியது.
மாநிலங்களவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களை தொடர்ந்து பேச அனுமதிப்பதாகவும், எதிர்கட்சி உறுப்பினர்கள் வழங்கும் நோட்டிஸ்களை நிராகரிப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாகத்தான் ஜகதீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.
மேலும், அவையில் அனுபவம் வாய்ந்த தலைவர்களை பேசவிடாமல் தன்கர் தடுக்கிறார் என்றும், பள்ளித் தலைமை ஆசிரியர் போல் செயல்படுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சுதந்திரத்துக்குப் பிறகு 67-வது அரசியல் சாசன பிரிவின் கீழ் மாநிலங்களவையின் தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இத்தகைய முடிவு எடுப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் கூடிய தீர்மானத்தின் மூலம் குடியரசுத் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்யலாம் என்றும், இதற்காக மக்களவையின் ஒப்புதலையும் பெறவேண்டும் என்றும் பிரிவு 67(பி) குறிப்பிடுகிறது. எனினும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு 14 நாட்கள் முன்பாகவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் வழங்குவது அவசியம்.
மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 14 இடங்கள் காலியாக உள்ளன. பெரும்பான்மைக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்னும் நிலையில் எதிர்கட்சிகள் வசம் 85 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்தால் கூட எண்ணிக்கை போதாது. இதனால், இந்த தீர்மானம் தோல்வியடையவே வாய்ப்புகள் அதிகம் என்று ஆளுங்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன