Corruption list : ஊழல் பட்டியலைக் கையிலெடுத்த கந்தசாமி IPS, கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்

Continues below advertisement

’அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்’ : விரைவில் தொடங்குகிறது விசாரணை..! அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்துவிட்டு, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிடுங்கள் என்று கேட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர். இப்போது அவர் யாரிடமும் போய் கேட்க வேண்டியதில்லை. கண்சிமிட்டினால் போதும், நடவடிக்கைகள் பாயும்! கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அமைச்சர்கள் வரை பலர் மீது எழுந்த ஊழல் புகார்களுக்கான ஆதாரங்களை திரட்டி ஆளுநரிடம் புகார் அளித்திருந்தது திமுக. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் கடந்த கால ஆட்சியில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு, இந்த ஊழல் பட்டியலை மீண்டும் கையிலெடுத்திருப்பது அதிமுக வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கண்டிப்புக்கு பெயர் போன கந்தசாமி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டபோதே, அடுத்தடுத்து அதிரடிகள் அரங்கேறும் என நினைத்துக்கொண்டிருக்கையில், கொரோனா 2-வது அலை தீவிரமானதால் அரசு அமைதியானது. இப்போது நடவடிக்கை எடுத்தால், நோய்த்தொற்றை குறைக்க முயற்சி எடுக்காமல் பழிவாங்கும் படலத்தை திமுக ஆரம்பித்துவிட்டதாக விமர்சனம் எழும் என்பதால் ஆறப்போட்டனர். முழு ஊரடங்கு கைகொடுத்து கொரோனா தொற்றுகள் குறையத் தொடங்கி, அரசுக்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்திருக்கும் இந்த சூழலில், அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மீண்டும் தூசுத்தட்டப்பட்டிருக்கிறது. இதனால், அந்த பட்டியலில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட இருக்கிறார்கள். முதலில் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி, பின்னர் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு போட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர். அதற்காக ஏற்கனவே உள்ள ஆதாரங்களை சரிபார்ப்பது, கூடுதல் ஆதாரங்களை திரட்டுவதுமாக பணிகள் சூடு பிடித்துள்ளன. முன்னாள் அமைச்சர்கள் வகித்த பதவிகளில் தற்போது உள்ள திமுக அமைச்சர்களிடமும் அந்தந்தத் துறைகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த விவரங்களையும் கோரியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை. கடந்த 2020, டிசம்பர் 20ஆம் தேதி, 7 அமைச்சர்கள் மீது 15 புகார்களை ஆளுநரிடம் நேரடியாக சென்று அளித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதன் பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 2-ஆம் கட்ட ஊழல் பட்டியலை துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்று ஆளுநரிடம் கொடுத்தனர். இதில், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, தனது நெருங்கிய உறவினர்களுக்கு முறைகேடாக 6,134 கோடி மதிப்பிலான, 6 நெடுஞ்சாலை டெண்டர்களை வழங்கினார், வருமானத்திற்கு அதிகமாக 200 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்தார் என்றும், ஒபிஎஸ், காக்னிஷண்ட் கட்டுமான டெண்டரில் ஊழல் செய்தார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கிராம ஊராட்சிகளுகு எல்.இ.டி விளக்கு வாங்குவதில் எஸ்.பி.வேலுமணி 875 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்தார், அரசு மருத்துவர்கள், ஊழியர்கள் நியமனங்கள், பணியிட மாறுதல்களில் 20 கோடி ரூபாய் விஜயபாஸ்கர் முறைகேடாக பணம் பார்த்தார் என திமுக அந்த புகாரில் குற்றஞ்சாட்டியிருந்தது. அதோடு சேர்த்து, உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ், மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி, வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஆர்.பி. உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, அதற்கான ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த புகார்கள் மீதான நடவடிக்கைகளை வரும் நாட்களில் தொடங்கி, தனது அதிரடியை காட்டவிருக்கிறார் கந்தசாமி. இதனை அறிந்த அதிமுக வட்டாரம் அரண்டுபோய் கிடக்கிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram