Jagdeep Dhankhar Resign | நாடாளுமன்றம் முதல் நாள்..ஜகதீப் தன்கர் ராஜினாமா! நடந்தது என்ன?

நாட்டின் குடியரசுத் துணைத்தலைவராக பதவி வகித்து வருபவர் ஜெகதீப் தன்கர். 74 வயதான இவர் 2022ம் ஆண்டு முதல் நாட்டின் குடியரசுத் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்கடந்த சில நாட்களாவே வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஜெகதீப் தன்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நேரத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் அளித்துள்ளார். அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு அவரது ராஜினாமா கடிதத்தை திரெளபதி முர்முவும் ஏற்றுக்கொண்டார். 

யார் இந்த ஜெகதீப் தன்கர்?

ஜெகதீப் தன்கர் 1951ம் ஆண்டு மே 18ம் தேதி பிறந்துள்ளார். இவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். அங்குள்ள ஜுங்ஜுனு மாவட்டத்தில் கிதானா கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்த அவர் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக திறம்பட பணியாற்றவர், உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராக வாதாடியுள்ளார். 

வழக்கறிஞராக இருந்தவருக்கு அரசியலில் நாட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் தனது ஜுங்ஜுனு தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு கடந்த 1989ம் ஆண்டு தேர்வானார். பின்னர், ஜனதா தளத்தில் இருந்து காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார். 1991ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த அவர், 1993ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். 

ஜனதா தளத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி காங்கிரஸ் கட்சி மூலமாக எம்பி, எம்எல்ஏவாக இருந்த ஜெகதீப் தன்கர் 2003ம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார். 2016ம் ஆண்டு பாஜக சட்டப்பிரிவுக்கு தலைவரானார். 2019ம் ஆண்டு மேற்கு வங்காளத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். அப்போது, அவருக்கும் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

பின்னர், தனது பதவியை 2022ம் ஆண்டு ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவருக்கு போட்டியிட்டார். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், அவர் இன்று தனது பதவியை உடல்நலம் கருதி ராஜினாமா செய்தார். 

குடியரசுத் துணைத் தலைவர் என்பவர் மாநிலங்களவைத் தலைவரும் ஆவார். ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த முடிவு குறித்து அவர் ஏற்கனவே அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியுடன் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரை தன்னால் நடத்த இயலாது என்ற காரணத்தாலே அவர் தனது பதவியை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola