IC 814 Controversy : விமானத்தை கடத்தியது யார்? NETFLIX-ஐ பொளக்கும் பாஜக! சிக்கலில் IC 814 சீரிஸ்
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான, `IC 814 காந்தஹார் ஹைஜாக் சீரிஸில் கடத்தல்காரர்களில் சிலரின் பெயரை இந்து பெயராக வைத்திருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. சீரிஸ் சர்ச்சை தொடர்பாக, நெட்ஃப்ளிக்ஸிற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1999 இல் நடந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 814-ன் கடத்தல் சம்பவத்தை மையமாக கொண்டு இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 54 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விமானம் 5 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஹர்கத்-உல்-முஜாஹிதீனை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
வெப் சீரிஸில் சிலரின் பெயரை இந்து பெயராக வைத்திருப்பது சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடத்தலுக்கு காரணமான ஐந்து பேரும் தொடரில் 'ஹெட்', 'டாக்டர்', 'பர்கர்', 'போலா' மற்றும் 'சங்கர்' போன்ற குறியீட்டுப் பெயர்களுடன் சித்தரிக்கப்பட்டடுள்ளனர். அதில் 'போலா' மற்றும் 'சங்கர்' ஆகிய இரு பெயர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தநிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், இத்தொடரில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு இந்தியாவின் நெட்ஃபிலிக்ஸ் தலைமை அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறது.
பாஜக தரப்பில் இருந்து இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர் அமித் மாள்வியா தனது எக்ஸ் பதிவில், ‘விமானத்தை கடத்திய தீவிரவாதிகளின் முஸ்லின் அடையாளத்தை மறைக்க திரைப்படத் தயாரிப்பாளர் அனுபவ் சின்ஹா மாற்று பெயர்களை பயன்படுத்தியுள்ளார். இதன் விளைவாக சில ஆண்டுகளுக்கு பிறகு IC-814 ஐ இந்துக்கள் கடத்தியதாக மக்கள் நினைப்பார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் குற்றத்தை மூடி மறைக்கும் இடதுசாரிகளின் அஜென்டா. 1970களில் இருந்தே இடதுசாரிகள் இதை தீவிரமாக பயன்படுத்தி வருகிறார்கள்” என விமர்சித்துள்ளார்.