Govi Chezhian : ”அமைச்சராகியும் மரியாதை இல்ல” பதவியால் என்ன பிரயோஜனம்! புலம்பும் கோவி செழியன்?
அமைச்சரா இருந்து என்ன பிரோஜனம், என்ன யாரு மதிக்கிறாங்க என்று நெருங்கியவர்களிடம் அமைச்சர் கோவி செழியன் புலம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றத்தில், மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று உயர்கல்வித் துறைக்கு பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை அமைச்சராக்கியதுதான். முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக நீதி கொள்கை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கோவி.செழியனை உயர்கல்வித் துறை என்ற முக்கியமான துறைக்கு அமைச்சர் ஆக்கினார் அவர். ஆனால், கோவி.செழியனுக்கு தன்னுடைய சொந்த மாவட்டத்திலேயே உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் மனம் நொந்து அவர் பேசியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சி அமைந்ததும் பட்டியலினத்தை சேர்ந்த சி.வி.கணேசன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் ஆகியோர் அமைச்சர்கள் ஆக்கப்பட்டார்கள். அதில், சி.வி.கணேசனுக்கு தொழிலாளர் நலத்துறையும், கயல்விழி செல்வராஜூவிற்கு ஆதிதிராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மதிவேந்தனுக்கு முதலில் சுற்றுலாத் துறையும் பின்னர் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது வனத்துறையும் ஒதுக்கப்பட்டது. பட்டியலினத்தை சேர்ந்த மதிவேந்தனுக்கு மட்டுமே பெரிய இலாக்கவை திமுக அரசில் ஒதுக்கியிருப்பதாகவும் சமூக நீதி பேசும் திமுக மற்ற இருவரையும் பெயருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்து வைத்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் பேசி வந்தனர். இந்நிலையில், ஒரு பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தலித்துகள் ஒருநாளும் முதல்வர் ஆகமுடியாது என்று பேசியது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமூக நீதி, சமத்துவம் என்ற கொள்கை பிடிப்புடன் ஆட்சி நடத்துவதாக சொல்லி வரும் திமுக, உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக ஆக்கும் நேரத்தில் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவருக்கு மிக முக்கியமான துறையை ஒதுக்க முடிவு செய்தது. அதனடிப்படையில், இதுவரை அமைச்சர் இல்லாத மாவட்டமாக இருந்துவந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கோவி.செழியனை அமைச்சர் ஆக்கி, அவருக்கு உயர்கல்வித் துறை என்ற முக்கியமான இலாக்காவையும் ஒதுக்கி அதிரடி காட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது பட்டியலின மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
உயர் கல்வித் துறைக்கே அமைச்சர் ஆகி மகிழ்ச்சியில் தனது சொந்த மாவட்டத்திற்கு சென்ற கோவி. செழியனுக்கு அவரை வரவேற்க அதிருப்தியே காத்திருந்தது. மாவட்ட நிர்வாகிகள் பலரும் கோவி.செழியனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பெயருக்கு அவருக்கு வரவேற்பு கொடுத்துவிட்டு பலரும் சென்றதாக தெரிகிறது. அமைச்சரை பார்க்க வருபவர்களுக்கு மத்தியில் மாவட்ட நிர்வாகிகளை பார்க்க அமைச்சராக இருக்கும் கோவி.செழியனே சென்றார். ஆனாலும், மாவட்ட நிர்வாகிகளில் சிலர் அவரை வெகுநேரம் காக்க வைத்த நிகழ்வுகள் எல்லாம் அங்கு அரங்கேறியிருப்பதாக புலம்புகின்றனர் அவரது ஆதரவாளர்க்ள். இதனால் மன வேதனையடைந்த கோவி.செழியன் தன்னுடைய ஆதரவாளர்களிடம் அமைச்சர் ஆனாலும் இவங்களுக்கு அடிமை சேவகம்தான் செய்ய வேண்டுமா? என்று ஆவேசப்பட்டார் என்கிறார்கள்.
தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் விசாரித்தபோது, இந்த மாவட்டத்திற்கு அமைச்சர் கொடுத்தால் அது திருவையாறு எம்.எல்.ஏவும் கடந்த கால தேர்தலில் நடிகர் சிவாஜி கணேசனையே தோற்கடித்தவருமான துரை.சந்திரசேகருக்கோ, தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ டி.கே.ஜி நிலமேகத்திற்கோ அல்லது கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகனுக்கோதான் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அரசு கொறடாவாக பதவி வகித்த கோவி.செழியனுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது தஞ்சை திமுக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதன் காரணமாகவே கோவி.செழியனுக்கு உரிய மரியாதையை அவர்கள் அளிக்கவில்லையென்றும் கூறப்படுகிறது.
அதோடு, தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கோவி செழியன் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தாலும் எம்.எல்.ஏக்களும் திமுக நிர்வாகிகளும் அவரை காக்க வைக்கும் விதமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே நேரத்தில் அமைச்சர் ஆனபின்னர் முதன் முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல கோவி செழியன் திட்டமிட்ட நிலையில், திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன், தஞ்சை எம்.பி. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கோவி செழியனை வரவேற்க காத்திருந்த நிலையில், அவர் தாமதமாக சென்றே வரவேற்பை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் கோவி செழியன் வந்த பின்னரே மாவட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு வருவதை வழக்கமாக மாற்றிவிட்டதாகவும் தெரிகிறது.
அதிகார மிக்க பதவியை மட்டுமே பட்டியலினத்தவர்களுக்கு வழங்கிவிட்டால் போதுமா? அந்த அதிகாரத்தை செலுத்தும் வகையில் அவர்களுக்கான வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பட்டியலின அமைச்சர்களுக்கு உரிய மரியாதை தராத திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் பேசப்படும் இந்த விவகாரமும் அவர் தனது ஆதரவாளர்களிடம் புலம்பியாதாக வெளியான தகவலும் உண்மைதானா என்று அறிய உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியனை பல முறை தொடர்புகொண்டபோதும் அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை.