Modi Oath Ceremony | TDP-க்கு 4.. நித்திஷ்க்கு 2நாட்டின் பணக்கார MP-க்கு 1 மோடி 3.0 அமைச்சரவை LIST
பிரதமர் மோடி பதவியேற்கும் விழாவில் இன்று தெலுங்கு தேசம் கட்சியின் 4 பேருக்கும், ஜனதா தளம் கட்சியின் 2 பேருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 4ம் தேதி வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளின் படி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்ட பா.ஜ.க., அதன் கூட்டணி கட்சியுடன் இணைந்தே 293 இடங்கள் மட்டுமே கைப்பற்றியது.
இதையடுத்து, ஆந்திராவில் ஆட்சியமைக்கும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பீகாரில் ஆட்சியுள்ள நிதிஷ்குமாரின் ஜனதா தளம் கட்சியின் உதவியுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், அவருடன் இணைந்து 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உறுதுணையாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 பேருக்கும், நிதிஷ்குமாரின் ஜனதா தளத்திற்கு 2 பேருக்கும் மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
16 தொகுதிளை தங்கள் வசம் வைத்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்களான ராம் மோகன் நாயுடு, ஹரீஷ் பாலயோகி. டகுமல்லா பிரசாத் மற்றும் சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், சந்திரசேகர் ராவ் மிகவும் பணக்கார எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டுமின்றி நிதிஷ்குமாரின் ஜனதா தளத்தில் இரண்டு மூத்த தலைவர்களுக்கு மோடியின் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பீகாரின் முங்கர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட லாலன்சிங்கிற்கும், ராஜ்ய சபா எம்.பி.யான ராம்நாத் தாக்கூருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க நிதிஷ்குமார் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. ராம்நாத் தாக்கூர் சமீபத்தில் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிய கர்பூரி தாக்கூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டுமின்றி, கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோடி மீண்டும் ஆட்சி அமைக்க தெலுங்கு தேசமும், ஜனதா தளமும் முக்கிய பங்காற்றுவதால் அந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவியை வழங்க சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.