ABP News

Kalaignar park zipline | ஜிப்லைனில் சிக்கி அலறிய பெண்கள் 5 நாளிலேயே இப்படியா” கொந்தளிக்கும் EPS

Continues below advertisement

கலைஞர் பூங்கா ஜிப்லைனில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 பெண்கள் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பூங்கா திறந்த 5 நாட்களில் பழுது ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் அமைக்கப்பட்ட "கலைஞர் நூற்றாண்டு பூங்கா"வை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி திறந்து வைத்தார். தோட்டக்கலைத் துறையின் 6.09 ஏக்கர் நிலத்தில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், 120 அடி நீளமுடைய பனிமூட்டப் பாதை, கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னை மக்கள் பூங்காவை பார்ப்பதற்கு குடும்பத்தினருடன் சென்று வருகின்றனர். விஜயதசமியை ஒட்டி தொடர் விடுமுறை என்பதால் பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த சூழலில் ஜிப் லைனில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் 2 பெண்கள் மாட்டிக் கொண்டு அலறினர். சுமார் 20 நிமிடங்களாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீட்கும் பணி நடந்தது. பின்னர் இருவரும் பத்திரமாக ஜிப்லைனில் இருந்து இறக்கப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சன வலையில் சிக்கியுள்ளது, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-ம் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட விடியா திமுக அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது. திரு. கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது விடியா திமுக அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த திரு.கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது விடியா திமுக அரசு. பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram