NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்
நீட் முதுநிலை தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பாஜகவை விளாசி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
நடப்பாண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 4 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. முடிவுகள் வெளியானதில் இருந்து, தேர்வில் குளறுபடிகள் இருந்ததாக கூறி பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை தொடர்ந்து, மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் இறங்கினர்.
இந்நிலையில் , யுஜிசி நெட் தேர்விலும் முறைகேடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீட் முதுநிலை தேர்வானது நடைபெற இருந்த நிலையில், நேற்று ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் பதிவில், ‘மோடியின் ஆட்சியில் கல்வி முறை சீரழிந்து இருப்பதற்கு இது மற்றொரு உதாரணம். பா.ஜ.க ஆட்சியில், மாணவர்கள், தங்களது எதிர்காலத்தை காப்பாற்ற, அரசுடன் 'போராட' வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். காகிதக் கசிவு மோசடி மற்றும் கல்வி மாஃபியாவின் முன் எதுவும் செய்ய முடியாதபடி மோடி இருக்கிறார். மாணவர்களின் எதிர்காலத்துக்கு நரேந்திர மோடியின் திறமையற்ற அரசு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதிலிருந்து நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், ‘இரண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை விரக்தியடைய வைத்துள்ளது. மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையை தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் மனதில் மீண்டும் நம்பிக்கையை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.