Durai Vaiko Vs Mallai sathya | ”மோதி பார்த்திடலாம் வா?”துரை வைகோ Vs மல்லை சத்யா இரண்டாக உடையும் மதிமுக? | Vaiko | MDMK

மகனை விட மல்லை சத்யா தான் உங்களுக்கு முக்கியமா என வைகோ மீது கோபப்பட்டு துரை வைகோ பதவியை தூக்கியெறிந்ததாக சொல்கின்றனர். வைகோவுக்கே தெரியாமல் துரை வைகோ கட்சி பதவியில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

துரை வைகோவுக்கு மதிமுகவில் முதன்மை செயலாளர் பதவி கொடுத்ததில் இருந்தே அவருக்கும் கட்சி சீனியர் மல்லை சத்யாவுக்கு போட்டா போட்டி நடந்து வருகிறது. வாரிசு அரசியலை எதிர்க்கும் வைகோவே தனது மகனை பதவியில் உட்கார வைத்ததை சீனியர்கள் விரும்பவில்லை. துரை வைகோ ஆதரவாளர்கள் மல்லை சத்யாவை ஓரங்கட்டி வந்த நிலையில், மற்றொரு பக்கம் கட்சியில் சாதி பார்த்து பதவி கொடுப்பதாக மல்லை சத்யா ஆதரவாளர்கள் துரை வைகோ தரப்பை அட்டாக் செய்தனர். 

ஒரு கட்டம் மேலே போய் திருச்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என துரை வைகோ ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். இத்தனை நாட்களாக திரைமறைவில் நடந்து வந்த உட்கட்சி மோதல் வெளிப்படையாகவே வெடிக்க ஆரம்பித்தது. மல்லை சத்யா தனது சமூக வலைதள பக்கத்தில், ஒரு சிலர் எனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால் என் அன்புத் தலைவர் வைகோ இதயத்தில் இருந்து என்னை நீக்குவதற்கு எந்த சக்தியாலும் முடியாது என ஆவேசமானார். 

மகன் பக்கம் நிற்பதா இல்லை கட்சியில் இத்தனை ஆண்டுகளாக இருக்கும் தனக்கு வலதுகரமாக இருக்கும் மல்லை சத்யா பக்கம் நிற்பதா என குழம்பினார் வைகோ. ஆனால் வைகோவின் செயல்பாடுகள் மல்லை சத்யாவுக்கு ஆதரவாகவே இருந்தன. சில மாவட்ட கழகங்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானங்கள் நிறை வேற்றி உள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக இத்தகைய கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றக்  கூடாது என்று கண்டித்தார் வைகோ. இது துரை வைகோவுக்கு கோபத்தை கிளப்பியதாக சொல்கின்றனர். இந்த பிரச்னையை சரிகட்டுவதற்காக ஏப்ரல் 20ம் தேதி மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டுகிறார் வைகோ.

அதற்கு முந்தைய நாளே கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். வைகோவுக்கே தெரியாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டு தனது அதிருப்தியை காட்டியுள்ளார். செய்திகளில் பார்த்து தான் இந்த சம்பவத்தை தெரிந்து கொண்டதாகவும், துரை வைகோ பதவியில் இருந்து விலகியது அதிர்ச்சி அளிப்பதாகவும் வைகோ புலம்பியுள்ளார்.

துரை வைகோ தனது அறிக்கையில், ‘. தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் 'முதன்மை செயலாளர் "என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன் ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன்” என சொல்லியுள்ளார்.

நாளை நடக்கவிருக்கும் மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் தான் மதிமுகவில் திருப்புமுனையாக அமையப் போகிறது என்ற பேச்சும் இருக்கிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola