மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
முதலமைச்சர் ஸ்டாலினை வைகோ சந்தித்த சில நாட்களிலேயே டெல்லியில் பிரதமர் மோடியை துரை வைகோ சந்தித்து பேசியுள்ளது திமுகவினருக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. சந்திப்பின் பின்னணி என்ன என்பது தொடர்பாக துரை வைகோ விளக்கம் கொடுத்தாலும், வேறு சில கணக்குகளும் இருப்பதாக திமுகவினர் முனுமுனுக்கின்றனர்.
திமுகவில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்தனர். அப்படி எதுவும் இல்லை, கூட்டணியை உடைப்பதற்காக பாஜகவினர் புரளியை கிளப்புவதாக கூட்டணியில் இருந்து குரல் வந்தாலும், கவனம் மதிமுக பக்கம் சென்றது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் வைகோ திட்டவட்டமாக இருந்தாலும் துரை வைகோ அதற்கு முரணான நிலைப்பாட்டுடன் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. பாஜகவுடன் தனது மகன் துரை வைகோ நெருக்கமாக இருப்பதால் வைகோவும் அப்செட்டில் இருப்பதாக சொல்கின்றனர்.
தன்னுடைய தந்தைக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் திமுக தரவில்லை என்பதை காரணமாக வைத்து திமுக கூட்டணியை முறித்துக்கொள்ளும் ஏற்பாடுகளில் துரை வைகோ இறங்கியுள்ளதாகவும், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மத்திய அமைச்சர் ஆகும் திட்டத்துடன் அவர் காய்நகர்த்தி வருகிறார் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதனையறிந்த மதிமுகவினரோ, துரை வைகோ மட்டும் மத்திய அமைச்சர் ஆகவேண்டும், களத்தில் உழைக்கும் நாங்கள் சட்டமன்றத்திற்கு போக வேண்டாமா? என தங்களுக்குள் பேசிவருகின்றனர். இந்தநிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை வைகோவும், துரை வைகோவும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, 2026ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும். பாஜகவுடன் இம்மிளவும் மதிமுக உறவு வைத்துக் கொள்ளாது என்பதை தெளிவாக சொல்லிவிட்டார்.
இந்தநிலையில் துரை வைகோ நேற்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியது கவனம் பெற்றுள்ளது. ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணனை மீட்க வேண்டும் என்பது தொடர்பாக பேசியதாக துரை வைகோ விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆனால் கூட்டணி கணக்குகளை வைத்துதான் இந்த சந்திப்பு நடந்திருக்கும் என திமுகவினர் கடுப்பில் இருக்கின்றனர். எதிர்க்கட்சி எம்.பிக்கள் பிரதமரை சந்திப்பதற்கு அவ்வளவு எளிதில் அனுமதி கிடைத்து விடாது என்பதை சுட்டிக்காட்டி துரை வைகோவை நோக்கி கேள்விகளை அடுக்குகின்றனர். அதுவும் வைகோ முதலமைச்சரை சந்தித்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக சொன்ன பிறகு உடனடியாக இந்த சந்திப்பிற்கு அனுமதி கிடைத்துள்ளது ஏன் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். துரை வைகோவை தங்கள் பக்கம் இழுத்து திமுக கூட்டணியை உடைக்க பாஜக காய் நகர்த்தி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. சமீப காலமாக துரை வைகோவின் நடவடிக்கைகளும் அவர் பாஜக பக்கம் சாய்வதையே காட்டுவதாக மதிமுகவினரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.