DMK VCK Alliance | ”6 சீட் பத்தாது, 10 குடுங்க” விடாப்பிடியாக நிற்கும் திருமா இழுபறியில் திமுக-விசிக
இரட்டை இலக்கத்தில் சீட் கேட்டு திருமாவளவன் விடாப்பிடியாக இருப்பதால் திமுக விசிக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் 21 கட்சிகள் இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லாமல் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய நிலைமையில் திமுக இருக்கிறது. அதே நேரம் தனித்து பெரும்பான்மை பெரும் வகையில் உதயசூரியன் சின்னத்தை 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
ஆரம்பத்தில் காங்கிரஸுக்கும் குறைவான தொகுதிகளையே ஒதுக்க திமுக திட்டமிட்ட நிலையில், 2 கட்சிகளுக்கும் கூட்டணியிலேயே சலசலப்பு வந்ததால் இறுதியில் 28 தொகுதிகளுக்கு 2 கட்சிகளும் ஒத்துக் கொண்டன. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவுக்கு இந்த தேர்தலில் 4 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் 2 தொகுதிகள் கிடைத்துள்ளன. இதே போல கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 5 தொகுதி தான் ஒதுக்க முடியும் என திமுக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் விசிகவுக்கு கடந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போதும் ஒரு தொகுதியை குறைத்து வழங்க திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த முறை அதனை ஏற்றுக் கொள்ள திருமாவளவன் ரெடியாக இல்லை.
கடந்த மார்ச் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை சுமார் 15 நாட்களை கடந்தும் நடைபெறவில்லை. திமுக தலைமையிடம் 12 தொகுதிகளை கொண்ட பட்டியலை கொடுத்து குறைந்தது 10 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என திருமாவளவன் விடாப்பிடியாக இருப்பதாக சொல்கின்றனர்.
ஆனால் திமுக தலைமை கடந்த முறை கொடுத்த அதே தொகுதி எண்ணிக்கையை வேண்டுமானல் கொடுக்க இறங்கி வந்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. கட்சி வளர்ச்சியடைந்துள்ளதால் இரட்டை இலக்கத்தில் சீட் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் திருமாவளவன் நினைப்பதாக சொல்கின்றனர். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் இன்றோ நாளையோ விடுதலை சிறுத்தை கட்சியிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி உடன்பாடு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. விசிகவுக்கு இரட்டை இலக்க சீட் கிடைக்குமா, அல்லது திமுகவின் டீலுக்கு விசிக இறங்கி வருமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.