DMK MLA Candidate Thiruvasagam | ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?

அமைச்சர் முத்துசாமியின் ஆதரவு திருவாசகத்திற்கு இருப்பதால் அவருக்கு எம்.எல்.ஏ சீட் பெற்றுத்தர முத்துச்சாமியே பரிந்துரை செய்வார் என்பது ஈரோடு மாவட்ட இளைஞரணியினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திமுகவிலும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுப்பவர்களுக்கான அவகாசமும் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து 2வது முறை ஆட்சி கட்டிலில் அமர திமுக தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதில் முக்கியமாக திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களை சமரசமின்றி தேர்வு செய்ய திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. 

குறிப்பாக, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் அதிமுகவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்களை களமிறங்கி அவர்களை வெற்றிபெற செய்து, திமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலத்தை மாற்ற திமுக வியூக வகுப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

அந்த வகையில், ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் பழைய வேட்பாளர்களுக்கு பதிலாக இளம் ரத்தம் பாயும் இளைஞர்களை களமிறக்க திமுக முடிவு செய்திருக்கிறது. குறிப்பாக, திமுக இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு இந்த முறை அதிக அளவில் வாய்ப்பு கொடுத்து, உதயநிதி ஸ்டாலினுக்கு என ஒரு தனி பட்டாளத்தை உருவாக்கிக்கொடுக்கவும் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ஈரோடு திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகத்திற்கு ஈரோடு மாவட்ட தொகுதிகளில் ஒரு தொகுதியை உதயநிதி ஸ்டாலின் ஒதுக்கி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நீட் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி, இளைஞரணியை இல்லந்தோறும் தனது மாவட்டத்தில் கொண்டுச் சேர்த்ததன் மூலம் உதயநிதி ஸ்டாலினிடம் நற்பெயரை பெற்றுள்ள திருவாசகத்திற்கு இந்த முறை சீட் உறுதி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலில் அதே இளைஞரணியை சேர்ந்த பிரகாஷ்க்கு வாய்ப்பு அளித்தார் உதயநிதி ஸ்டாலின். அவரை வெற்றிபெற வைக்க திருவாசகமும் மிகப்பெரிய அளவில் வேலை பார்த்திருக்கிறார். மாவட்ட அளவில் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்து தருவது என ஈரோடு மாவட்ட இளைஞர்கள் மத்தியில் திருவாசகம் பிரபலமாக அறியப்பட்டு வருகிறார். குறிப்பாக, புயல், மழை, வெள்ள பாதிப்புகளின்போது திருவாசகம் செயல்பட்ட விதமும், மக்களுக்கு அவர் நலத்திட்டம் செய்து உதவி செய்ததும் அந்த மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. 

சாதி, மதங்களுக்கு அப்பாற்றப்பட்டு திருவாசகம் செயல்பட்டாலும் மாவட்டத்தில் பெரிய  அளவில்  முதலியார் சமூக வாக்குகள் இருக்கும் நிலையில், திருவாசகம் போட்டியிட்டால் மற்ற சமுக வாக்குகளுடன் சேர்த்து கூடுதலாக முதலியார் வாக்குகள் அப்படியே இவருக்கு கிடைக்கும் என்பது அப்பகுதி திமுகவினரின் கருத்தாக இருக்கிறது. 

இளைஞரணியை சேர்ந்தவர்காக திருவாசகம் இருந்தாலும் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமியின் ஆதரவும் திருவாசகத்திற்கு இருப்பதால், இந்த முறை அவருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்க அமைச்சர் முத்துசாமியே பரிந்துரை செய்வார்கள் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் முதுநிலை பொறியயல் பட்டப்படிப்போடு சேர்த்து எம்.பி.ஏவும் படித்துள்ளதால் படித்த இளைஞரான திருவாசகத்திற்கு சீட் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. 8 வயதில் இருந்தே மொழிப் போர் போராட்டம், ஈழத்தமிழருக்கான போராட்டம் என களத்திலும் தொடர்ந்து பயணிப்பதால் ஈரோடு கிழக்கு அல்லது ஈரோடு மேற்கு ஆகிய இரு தொகுதிகளில் ஒரு தொகுதியை உதயநிதி திருவாசகத்திற்கு நிச்சயம் பெற்றுக் கொடுப்பார் என்பது ஈரோடு மாவட்ட இளைஞரணியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola