
DMK Election Plan : கோவையில் சத்யராஜின் மகள்!செ. பாலாஜி ஸ்கெட்ச்..SP வேலுமணிக்கு செக்
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் அதிமுகவை ஆட்டம் காண வைக்க முடிவு செய்துள்ள திமுக தலைமை, அங்கு எஸ்பி வேலுமணிக்கு எதிராக ஒரு பவர்ஃபுல்லான நபரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தமிழ் நடிகரும் பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை பின்பற்றுபவராகவும் திமுகவின் அனுதாபியாகவும் இருந்து வரும் நடிகர் சத்தியராஜின் மகள் திவ்யா சத்தியராஜ் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.இந்நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்தே திவ்யா திமுகவில் இணைந்துள்ளதாகவும் சத்தியராஜீன் பூர்வீகம் கோவை மாவட்டம் என்பதால், அதிமுக பலமாக இருக்கும் அந்த மாவட்டத்தில் சத்தியராஜீன் மகளான திவ்யாவை ஒரு தொகுதியில் போட்டியிட வைக்கலாமா என்று இப்போதே திமுக தலைமை ஆலோசனை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திவ்யாவும் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் எதிர்த்து நிற்க தயார் என்ற முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதனடிப்படையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இது திமுகவிற்கு கோவை மண்டலத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக கருதப்பட்ட நிலையில், அந்த மாவட்டத்திற்கு முதலில் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த சக்கரபாணி மாற்றப்பட்டு, அதே சமுதாயத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் செந்தில்பாலாஜி தலைமையில் திமுக அமோக வெற்றி பெற்றதுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அண்ணாமலையை எதிர்த்து வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முதலில் அந்த மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணிக்கு செக் வைக்க வேண்டும் என திமுக நினைத்துள்ளது. எனவே, எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து பிரபல நடிகர் சத்தியராஜீன் மகளான திவ்யாவை தொண்டாமுத்தூரில் போட்டியிட வைப்பது குறித்து திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுறது.
அதற்கு காரணம். தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் சத்தியராஜீன் உறவினர்கள், நண்பர்கள் அதிக அளவில் வசிப்பது ஒரு காரணம் என்றால் தன்னுடைய மகளுக்காக நடிகர் சத்தியராஜ், அவரது மகன் சிபிராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் மிகப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வார்கள் என்பதால் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக செல்வாக்குமிக்க நடிகராக இருக்கும் சத்தியராஜீன் மகளான திவ்யாவையே களமிறக்க திமுக-வின் முக்கிய நபர்கள் நினைப்பதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றுவதோடு மட்டுமில்லாமல் அந்த 10 தொகுதியில் ஒரு தொகுதியாக இருக்கும் தொண்டாமுத்தூரில் பவர்ஃபுல்லாக இருக்கும் எஸ்.பி.வேலுமணியை தோற்கடித்து காட்டவேண்டும் என்பதில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியாக இருக்கிறார். அதனால், மக்கள் கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கும் ஒரு வேட்பாளரை தேர்வு செய்வதையும் அவர் விரும்புகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், நடிகர் சத்தியராஜூடனும் செந்தில்பாலாஜிக்கு நெல்ல நட்பு இருப்பதால், திவ்யா அந்த தொகுதியில் போட்டியிட செந்தில்பாலாஜியே ஆதரவு கரம் நீட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விரைவில் திமுகவில் திவ்யாவிற்கு முக்கியமான ஒரு பொறுப்பு அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.