DMDK Issue: விஜயபிரபாகரனுக்கு பதவியா? தேமுதிகவில் வெடித்த கலகம்! சமாளிப்பாரா பிரேமலதா? | Premalatha

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு எதிராக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தருமபுரியில் தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். அந்தவகையில், தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக இருந்த  நல்லதம்பியின் பொறுப்பை தன்னுடைய மூத்த மகனான விஜய பிரபாகரனுக்கு வழங்குவதாக அறிவித்தார். மேலும், நல்லதம்பிக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பொறுப்பை வழங்கினார். அதேபோல், பொருளாளராக தன்னுடைய தம்பி எல்.கே.சுதீஷையும், துணைப்பொதுச்செயலாளர்களாக செந்தில் குமார், சுபா சந்திரன், பன்னீர் செல்வம் ஆகியோரையும் நியமித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத சூழலில் பிரேமலதா கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை மாற்றியது அக்கட்சி நிர்வாகிகளிடையே பேசுபொருளானது. குறிப்பாக தேமுதிக முன்னால் எம்.எல்.ஏ நல்லதம்பி-க்கு இளைஞரணி பொறுப்பு பறிக்கப்பட்டதும், துணப்பொதுச்செயலாளர் பொறுப்பை எதிர்நோக்கி காத்திருந்ததாக சொல்லப்படும் அனகை முருகேஷனுக்கு உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டதும் கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கட்சி தலைமைக்கு இருவரும் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியானது. முன்னதாக, கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நல்லதம்பி கடிதம் வழங்கினார். இது பரபரப்பை கிளப்பிய நிலையில், ”நான் எழுதிய கடிதத்தில் உயர்மட்டக் குழு பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு மட்டுமே கேட்டேன். விடுவிக்காத பட்சத்தில் நான் ஒதுங்கிக் கொள்வேன் என்று தான் கூறினேன்”என்று விளக்கம் கொடுத்தார்

அதேபோல், அனகை முருகேஷனும் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில மூத்த நிர்வாகிகளும் பிரேமலதா கட்சியை குடும்ப சொத்தாக மாற்றிவிட்டார் கட்சியின் முக்கிய பொறுப்புகளை எல்லம் தன்னுடைய குடும்பத்தினருக்கு வழங்கியிருப்பதை இரவு பகல் பாராமல் கேப்டன் விஜய்காந்திற்காக வேலை செய்து இத்தனை ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்களை புறக்கணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி போர்க்கொடி தூக்கியுள்ளதாக சொல்கின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola