”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
சிபி ராதாகிருஷ்ணனை துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்து ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல் ஒரு ப்ளானை போட்டுள்ளது பாஜக. செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தை கண்ட்ரோலில் வைத்திருக்கும் நிலையில், கொங்கு மண்டலத்தை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது பாஜக.
தமிழ்நாட்டை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. இது தமிழ்நாட்டிற்கும் தமிழருக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை என பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலை கணக்கில் வைத்து தான் சிபி ராதாகிருஷ்ணனை பாஜக தேர்ந்தெடுத்துள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாடு என்று பேசிக் கொண்டிருக்கும் போது, இதோடு சேர்த்து ஆபரேஷன் கொங்கு மண்டலத்தையும் வைத்து தான் பாஜகவின் மூவ் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
மக்களவை தேர்தலில் தென் மாவட்டங்கள் பாஜகவுக்கு கைகொடுத்தன. நெல்லை, மதுரை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிமுகவையே பின்னுக்கு தள்ளி 2ம் இடத்தை பிடித்தது பாஜக கூட்டணி. அதனால் சட்டப்பேரவை தேர்தலிலும் தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளை கேட்டு வாங்கி விட வேண்டும் என்ற நினைப்பில் இருக்கின்றனர்.
இந்தநிலையில் அடுத்ததாக கொங்கு மண்டலம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது பாஜக. 1998, 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவையில் களமிறங்கி வெற்றி பெற்று இருமுறை எம்.பி.யானவர் தான் சி.பி ராதாகிருஷ்ணன். 1998ல் அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பிறகு நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவில் இருந்து முதல்முறையாக எம்.பிக்கள் உருவாகினர். இந்த தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற 3 பேரில் சிபி ராதாகிருஷ்ணனும் ஒருவர். இப்படி ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே கோவை பகுதியில் அவருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. பாஜகவினர் மட்டுமல்லாமல் திமுக உள்ளிட்ட கட்சியினருடனும் இணக்கமாக இருக்கக் கூடியவர் என்பதால் கொங்கு மண்டலத்தில் அவருக்கு அதிக ஆதரவு இருப்பதாக சொல்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல் கவுண்டர் சமுதாய வாக்குகளை கையில் எடுத்தும் திமுகவுக்கு செக் வைக்கும் வகையில் இந்த மூவில் இறங்கியுள்ளது பாஜக. செந்தில் பாலாஜியை வைத்து கொங்கு மண்டலத்தில் கவுண்டர் வாக்கு வங்கியில் திமுக ஸ்ட்ராங்காக இருக்கிறது.
இருந்தாலும் செந்தில் பாலாஜி கரூரை சேர்ந்தவராக இருப்பதால், கோவையை சேர்ந்த ஒருவரை களமிறக்கும் போது கவுண்டர் வாக்குகள் பாஜக பக்கம் திரும்புவதற்கான வாய்ப்பிருப்பதாக பாஜக தலைமை கணக்கு போடுவதாக தெரிகிறது. அதிலும் துணை குடியரசுத்தலைவர் என்று தேசிய அளவில் பெரிய பதவிக்கு கோவையில் இருந்து ஒருவரை அனுப்பும் போது தேர்தல் நேரத்தில் கொங்கு மண்டலத்தில் ப்ளஸாக அமையும் என நினைக்கின்றனர். ஏற்கனவே அண்ணாமலையை வைத்து கொங்கு மண்டலத்தில் காலூன்ற பாஜக தலைமை முயற்சி செய்தது. ஆனால் அது நினைத்த அளவுக்கு கைகொடுக்காத நிலையில், சிபி ராதாகிருஷ்ணனை வைத்து ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல், தமிழ்நாடு மற்றும் கொங்கு மண்டலத்தையும் சேர்த்து கவர் செய்துள்ளது பாஜக.