Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
அடுத்த ஆண்டு தமிழ் நாட்டில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் என்றும் அதில் காங்கிரஸ்காரர்கள் இரண்டு பேர் அமைச்சர்களாக இருப்பர்கள் எனவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கூறியுள்ளது அரசியல் களத்தில் விவாதப்பொருளாகி மாறியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் கூட்டணி ஆட்சி முழக்கம் வெடித்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.
தமிழ் நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக-மற்றும் அதிமுக இப்போதே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இச்சூழலில் தான் அண்மைக்காலமாக தமிழக அரசியலில் பேசு பொருளாக இருக்கும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கம் மீண்டும் எழுந்துள்ளது. நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று பேசிய நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் இப்போது இந்த குரல் எழுந்துள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும். அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக இருப்பார்கள் என்று கொழுத்திப்போட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “தமிழகத்தில் காங்கிரஸும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது தான் நமது குறிக்கோள்.இதற்கு முன்னர் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியின் கவுரவத்துக்கு இழுக்கு வராத நிலையில் நமது கூட்டணி இருக்கும். அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக இருப்பார்கள். முதலில் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவோம். பிறகு மத்தியில் ஆட்சிக்கு வருவோம்”என்று கூறியுள்ளர். இவரது பேச்சை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகையும் ஆதரித்துள்ளார்.
இச்சூழலில், இவரது இந்த பேச்சு விவாதப்பொருளாகியுள்ள நிலையில் திமுகவில் கூட்டணியில் வெடிக்கிறதா கூட்டணி ஆட்சி முழக்கம் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தவெகவின் முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் எங்கள் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் இதை அதிமுக மறுத்து வருகிறது. அதேபோல், அன்புமணி ராமதாஸும் தங்களுக்கு ஆட்சியில் பங்கு கேட்டு வருகிறார் இச்சூழலில் தான் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் இதே கருத்தை முன்வைத்துள்ளதால் 2026 -ல் கூட்டணி ஆட்சி தான் அமையுமா என்று கேள்வி எழுந்துள்ளது.