Coimbatore Mayor : ஜாக்பாட் அடித்த ரங்கநாயகி! கதறி அழுத பெண் கவுன்சிலர்கள்.. அதிரும் கோவை

Continues below advertisement

முதல் முறையாக மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாயகி கோவை மேயர் தேர்தலில் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மேயராக வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது, திமுகவில் உள்ள சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் ஆகிய சிறப்புகளுடன் பதவியேற்ற கல்பனா ஆனந்தகுமார் இரண்டே ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கல்பனா மேயராக பொறுப்பேற்றவுடன் திமுக கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட்டது, மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் இணக்கமாக இல்லாமல் மோதல் போக்குடன் செயல்பட்டது, நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் எழுந்தன. கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பண வசூல் செய்தது, ஒப்பந்ததாரர்களிடம் கமிசன் கேட்டது, பக்கத்து வீட்டை பெண்ணை காலி செய்ய தொல்லை கொடுத்தது என அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் சிக்கினார். இதன் காரணமாக அவரை ராஜினாமா செய்ய கட்சி தலைமை அறிவுறுத்தியது. இதனையடுத்து உடல் நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

இந்தநிலையில் மாநகராட்சிக்கு புதிய மேயர் தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் மேயர் தேர்வு தொடர்பாக தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் காளப்பட்டியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கவுன்சிலர்கள் கூட்டம் தொடங்கியதும் அமைச்சர் கே.என்.நேரு, தான் கொண்டு வந்திருந்த கடிதத்தை எடுத்து நிர்வாகிகள் முன்னிலையில் படித்தார். இதில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரங்கநாயகியை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கோவை மேயர் தேர்தலில் ரங்கநாயகி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ரங்கநாயகி தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி அவர் தேர்வானார். முதல் முறையாக மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாயகிக்கு மேயராக  வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது, திமுகவில் உள்ள சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram