ஏன் அப்பவே சொல்லல தங்கமணி? அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது அனல் மின் நிலையத்தில் மேற்கொண்டு வரும் பணிகள், இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ள நிலக்கரியின் அளவு போன்றவற்றைக்குறித்து ஆய்வு நடைபெற்றன.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக அரசு தெரிவித்தது போல் அனைத்து துறைகளிலும் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி கடந்த ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் வடசென்னை அனல் மின் நிலையத்தினை ஆய்வு செய்வதற்கு இயக்குநர் உற்பத்தி, இயக்குநர் விநியோகம் போன்ற 3 பேர் கொண்ட குழுக்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தது. அதன் படி அவர்கள், அனல் மின்நிலையத்தில் இதுவரை நடைபெற்ற முறைகேடுகள் என்ன? என்ன தவறுகள் நடந்துள்ளது ?என்பது குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக இந்த முதற்கட்ட ஆய்வின் முடிவில், வட சென்னை அனல் மின் நிலையத்தில் பதிவேட்டில் உள்ள 2.38 லட்சம் டன் நிலக்கரியினை காணவில்லை என்றும், பதிவேட்டில் மட்டுமே அது உள்ளதாக எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 85 கோடி ரூபாய் இருக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். தற்போதைய முதற்கட்ட ஆய்விலேயே இவ்வளவு கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ள நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து ஆய்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த மோசடி வழக்கில் யார் யாருக்கு தொடர்பு இருந்தாலும் நிச்சயம் அவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.