EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை குறி வைத்து புதிதாக ஒரு ஊழல் வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்த் திறக்காமல் மவுனமாக இருப்பது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர், சட்டப்பேரவையில் கொறடா, கோவை புறநகர் மாவட்ட செயலாளர், என பல்வேறு பொறுப்புகளை தன்னகத்தே வைத்துள்ளவரும், அதிமுகவின் முக்கிய தளகர்த்தராக அறியப்படுபவருமான எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கிற்கு இதுவரை அதிமுக சார்பில் ஒரு கண்டனமோ, எதிர்ப்போ, அறிக்கையோ இந்த நிமிடம் வரை வரவில்லை. இத்தனைக்கும் வேலுமணி அதிமுக தலைமை நிலைய செயலாளராகவும் இருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததாக பதியப்பட்ட வழக்கில் 2021ல் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கிராம புறங்களில் எல்.இ.டி விளக்குகள் அமைப்பதில் 500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்திருப்பதாக பதியப்பட்ட மற்றொரு வழக்கில் கடந்த 2022ஆம் ஆண்டு அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை 2வது முறையாக அதிரடியாக சோதனை நடத்தியது. இந்நிலையில், மீண்டும் அவர் மீது சென்னை மழை நீர் வடிகால் பணிகளுக்கான டெண்டரில் ஊழல் செய்ததாக புதிய வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது.
இப்படி தொடர்ச்சியாக வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், இது குறித்து இப்போது வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் எந்த ஒரு கண்டனமோ, வழக்கு பதிவிற்கு எதிர்ப்போ, அறிக்கையோ வரவில்லை. ஆனால், டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதே நேரம் அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில மோசடி வழக்கில் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக அரசை கடுமையாக சாடி, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு போராட்டமும் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
மேலும் கடந்த 11ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழாவிற்கு சென்ற அதிமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏவுமான கேபி முனுசாமியை பங்கேற்கவிடாமல் திமுகவினர் தடுத்ததாக கூறி, அவருக்கு ஆதரவாகவும் திமுக அரசை குறை கூறியும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார் எடப்பாடி. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் வலதுகரம் என்று அறியப்பட்ட எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக இதுவரை குறைந்தபட்சம் சமூக வலைதளத்தில் கூட ஒரு கண்டன பதிவு செய்யாததும், குரல் கொடுக்காததும் அதிமுகவினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா – தினகரன் – ஓபிஎஸ் உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று வேலுமணி உள்ளிட்ட ஆறு மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தியதாக சொல்லப்படு, நிலையில், வேலுமணியுடனான நெருக்கத்தை எடப்பாடி பழனிசாமி குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக வேலுமணி இல்ல நிகழ்ச்சியில் கூட, எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே நல்லுறவு இல்லை என்றும் வேலுமணி விரைவில் அதனை வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தன.
இந்நிலையில்தான், வேலுமணி மீது மற்றொரு புதிய ஊழல் வழக்கை பதிவு செய்திருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. இதற்கு உடனடியாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி ஏதும் இதுவரை நடைபெறவில்லை. இதன் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கும் – எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே அதிமுகவில் மறைமுக யுத்தம் வெடித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதே நேரம் அதிமுகவில் இருந்து வேலுமணிக்கு ஆதரவாக யாரும் கருத்து தெரிவிக்காத நிலையில், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், அவர் மீதான வழக்கு பதிவிற்கு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் – தான் என்றும் அதிமுக ஒன்றிணைந்துவிட்டால் 2026ல் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று அறிந்த அவர் இப்படியான ஒரு வழக்கை அதிமுக இணைப்பை முன்னெடுத்த வேலுமணி மீது போட வைத்திருக்கிறார் என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து எரியும் தீயில் கூடுதல் எண்ணெய்யை ஊற்றியுள்ளார்.