புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு! கைது செய்ய 3 தனிப்படை! POLICE-க்கு சீக்ரெட் தகவல்
புஸ்ஸி ஆனந்த் தங்கியிருக்கும் இடம் பற்றிய முக்கிய தகவல் கிடைத்துள்ளதாகவும் அவரை கைது செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் தவெக பிரச்சாரத்தில் நடந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. விஜய்யைப் பார்க்க வந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேரின் உயிர் பரிதாபமாக பறிபோனது. இந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கில் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் மற்றும் தெற்கு நகர பொருளாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
மற்றொரு பக்கம் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமாரை கைது செய்யும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இருவரும் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நேரத்தில் புஸ்ஸி ஆனந்தும் நிர்மல் குமாரும் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தசரா விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.
அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான போலீசார் சம்பவ இடத்தில் இல்லை. புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தில் சமூக விரோதிகளால் தான் நெரிசல் ஏற்பட்டது என புஸ்ஸி ஆனந்த் தரப்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஸ்ஸி ஆனந்த் ஏற்காட்டில் தலைமறைவாகியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக சொல்கின்றனர். இதனை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்தை கைது செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி சென்னையிலும் புஸ்ஸி ஆனந்தை போலீசார் தேடி வருவதாக சொல்கின்றனர்.