
Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!
விஜய் பரந்தூர் மக்களை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், புஸ்ஸி ஆனந்த் ஏகனாபுரத்திற்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் 900 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தவெக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வரும் 19 அல்லது 20-ம் தேதி விஜய் பரந்தூர் சென்று மக்களை நேரில் சென்று சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் மக்களை சந்திப்பதற்காக பாதுகாப்பு வழங்ககோரி, மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் மனு அளிக்கப்பட்டது. தவெக நிர்வாகிகள் பரந்தூர் மக்களை நேரடியாக சந்தித்து கையகப்படுத்தப்படும் நிலங்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து விஜய்க்கு அறிக்கை அனுப்பும் பணியையும் செய்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தவெக நிர்வாகிகள் அய்யநாதன், ஜெகதீஸ்வரர் ஆகிய இருவரும் விமான நிலைய போராட்ட குழுவினரிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தநிலையில் ஏகனபுரம் அம்பேத்கர் சிலை அருகே 5 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு விஜய் மக்களை சந்திப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை சமன்படுத்தும் மற்றும் அப்பகுதியில் உள்ள முற்களை அகற்றும் பணியில் போராட்ட குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தவெக பொதுச்ச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏகனாபுரத்திற்கு வருகை தந்து தேர்வு செய்யப்பட்ட இடத்தினை ஆய்வு செய்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு களத்திற்கு நேரில் சென்று மக்களை சந்திக்காமல் இருந்தது விமர்சிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் பரந்தூர் செல்லவிருப்பது அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது