5 நாட்களாக MISSING! ஆனந்துக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று நடக்கப்போவது என்ன
5 நாட்களாக வெளியே தலைகாட்டாமல் இருக்கிற புஸ்ஸி ஆனந்துக்கு இன்று முன் ஜாமின் கிடைக்குமா என தவெகவினர் ஆவலோடு காத்திருக்கின்றனர். முன் ஜாமின் கிடைக்கவில்லையென்றால் புஸ்ஸி ஆனந்த் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என சொல்கின்றனர்.
கரூரில் தவெக பிரச்சாரத்தில் நடந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. விஜய்யைப் பார்க்க வந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேரின் உயிர் பரிதாபமாக பறிபோனது. இந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் மற்றும் தெற்கு நகர பொருளாளர் பவுன்ராஜ் ஆகியோரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். தலைமறைவாக உள்ள புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். புஸ்ஸி ஆனந்தை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கரூர் சம்பவம் நடந்ததில் இருந்து கடந்த 5 நாட்களாக புஸ்ஸி ஆனந்த் வெளியே தலைகாட்டாமல் இருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் இல்லாமலேயே சென்னையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. பொதுவாக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தான் இந்த கூட்டங்கள் நடக்கும். போலீசார் வலைவீசி தேடி வருவதால் புஸ்ஸி ஆனந்த் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக சொல்கின்றனர்.
இந்தநிலையில் முன் ஜாமின் கோரி புஸ்ஸி ஆனந்தும் நிர்மல் குமாரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். தசரா விடுமுறை முடிந்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இன்று புஸ்ஸி ஆனந்துக்கு முன் ஜாமின் கிடைக்குமா என தவெகவினர் ஆவலோடு காத்திருக்கின்றனர். அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தவெகவினர் குற்றம்சாட்டுகின்றனர். இன்றைய விசாரணையில் புஸ்ஸி ஆனந்துக்கு நீதிமன்றம் முன் ஜாமின் தராத பட்சத்தில் அவர் உடனடியாக கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சொல்கின்றனர்.