Vijay | விஜய்க்கு நோட்டீஸ்.. மாநாடு நேரத்தில் நெருக்கடி.. மீண்டும் சிக்கலில் த.வெ.க?
தவெக கொடி விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணைத்தலைவர் சந்தீப் வக்கீல் 5 நாட்களுக்குள் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரப்பை ஏற்படுத்தியிருகிறது.
தமிழ்நாடு அரசியல் களத்தை பொறுத்தவரையில், ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை அரசியல் இருந்து வருகிறது.
இப்படியிருக்க, நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார்.
விஜய்யின் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி நடத்த உள்ளார் விஜய். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தவெக கொடி விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணைத்தலைவர் சந்தீப் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே, தவெகவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் இதுதொடர்பாக புகார் அளித்திருந்தது.
கட்சி கொடியில் யானை படம் பயன்படுத்த ஆட்சேபனை தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி அதற்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரியது. இந்த புகாருக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், இதில் தலையிட முடியாது எனக் கூறியது. இந்த சூழலில், விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது தவெகவுக்கு புதிய சிக்கலாக மாறியுள்ளது.