Muslim Reservation | OBC பிரிவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து?அதிர்ச்சி கொடுத்த பாஜக!
இஸ்லாமியர்களுக்கு வழங்கப் பட்டு வரும் இடஒதுக்கீட்டை ராஜஸ்தான் பாஜக அரசு மறுபரிசீலனை செய்ய உள்ளதாக அம்மாநில அமைச்சர் அவினாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. அதில், ஆறு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் ஜூன் 1ஆம் தேதி, கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) பிரிவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், "ஓபிசி-க்களின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். கர்நாடகாவில் அனைத்து முஸ்லிம் சாதியினரையும் ஓபிசிக்களுடன் சேர்த்து பின்வாசல் வழியாக மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் அளித்தது. இந்த நடவடிக்கையானது ஓபிசி சமூகத்தின் இடஒதுக்கீட்டில் கணிசமான பகுதியைப் பறித்துவிட்டது" என்றார்.
மத்தியப் பிரதேசம் மட்டும் இன்றி பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களிலும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு குறித்து பிரதமர் பேசினார். இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை பொறுத்தவரையில், மத்திய அரசு பணிகளில் வழங்கப்படமாட்டாது.
மாநில அரசுகளின் பணிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும், அந்தந்த மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் இஸ்லாமியர்களின் சமூக பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு சில மாநில அரசுகள் மட்டுமே இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி வருகிறது.
அந்த வகையில், ராஜஸ்தானில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த இடஒதுக்கீட்டை ராஜஸ்தான் பாஜக அரசு மறுபரிசீலனை செய்ய உள்ளது.
ராஜஸ்தானில் சில இஸ்லாமிய பிரிவுகளை ஓபிசியாக வகைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு விரைவில் நியமிக்கப்பட உள்ளது. அது உரிய பரிந்துரைகளை வழங்கும்.
அம்மாநில சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் அவினாஷ் கெலாட் இதுகுறித்து கூறுகையில், "மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அரசியலமைப்பு அனுமதிக்காத போதிலும், சமரச அரசியலின் ஒரு பகுதியாக 1997 மற்றும் 2013க்கு இடைப்பட்ட காலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் 14 முஸ்லிம் குழுக்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீட்டினை வழங்கியது" என்றார்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் 1997 மற்றும் 2013க்கு இடைப்பட்ட காலத்தில் பாஜகவும் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு, ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்தது பாஜகதான். அதோடு, 2003 முதல் 2008 வரையிலாக காலக்கட்டத்தில் பாஜகவை சேர்ந்த வசுந்தரா ராஜே முதலமைச்சராக பதவி வகித்தார்.