Bangladesh PM Sheikh Hasina : நாட்டை விட்டு தப்பி ஓடிய பிரதமர்! வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி
வங்க தேசத்தில் மாணவர்கள் போராட்டம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். அவர் இந்தியாவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கதேச விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30% இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பு வெளியானது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் மாணாவர்கள் போராட்டம் நடத்திய போது போலீசாரின் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற குரல் வலுவடைந்தது. வங்கதேச ராணுவ அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தி, ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.
இந்தநிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்தில் இருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறியதை ராணுவமும் உறுதி செய்தது. அவர் இந்தியாவில் தஞ்சமடையவுள்ளதாக பேச்சு இருந்த நிலையில், திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். மேலும் நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும் வங்க தேச இந்திய எல்லையில் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையிலும், வங்க தேசத்தில் உள்ள அவரது வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர்.