Baba Siddique | EX மினிஸ்டர் சுட்டுக் கொலை! சல்மானை மிரட்டிய அதே ரவுடி? மிரள வைக்கும் பின்னணி
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் கானுடன் நெருக்கமானவர் என்பதால் இந்த கொலை நடந்ததா என்பதன் பின்னணியில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபா சித்திக், தனது மகனான MLA Zeeshan Siddique ன் அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் பாபா சித்திக் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நெஞ்சில் 4 புல்லட்கள் பாய்ந்ததில் பாபா சித்திக் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்தவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், ஒருவர் மட்டும் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் யாரோ பணம் கொடுத்து இவர்களை கொலை செய்ய வைத்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். பாபா சித்திக் எங்கு இருக்கிறார் என தகவல் கொடுத்தது யார் என்றும் விசாரித்து வருகின்றனர்.
15 நாட்களுக்கு முன்பே பாபா சித்திக்கிற்கு மிரட்டல் கடிதம் வந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கின்றனர். ஆனால் இதுதொடர்பான வழக்கு எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கொலையின் பின்னணியில் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்கின்றனர். சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பாபா சித்திக் சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1998ல் சல்மான் கான் அரியவகை மான்களை வேட்டையாடியதாக புகார் எழுந்தது. அந்த வழக்கு சல்மான் கான் சிறைக்கு சென்று வந்த பிறகும், மான் வேட்டை விவகாரம் அவரை விடவில்லை. சல்மான் கான் வேட்டையாடிய மான்களை பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருகின்றனர். அதனால் சல்மான் கானுக்கு எதிரியாக உருவெடுத்தார் லாரன்ஸ் பிஷ்னோய். அதன்பிறகு அவரது தரப்பில் இருந்து சல்மான் கானுக்கு மிரட்டல் வந்து கொண்டே இருந்தது. சல்மான் கான் வீட்டின் முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு சென்ற சம்பவமும் நடந்தது. அதன்பிறகு சல்மான் கானும் வெளியே செல்லும் போது குண்டு துளைக்காத கார்களை பயன்படுத்த ஆரம்பித்தார். சல்மான் கானுக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் எங்களுடைய எதிரிகள் என்று லாரன்ஸ் பிஷ்னோய் பக்கம் இருந்தவர்கள் பேசி வந்தனர்.
அதனால் சல்மான் கானுக்கு நெருக்கமாக இருக்கக் கூடிய பாபா சித்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது சிறையில் இருந்தாலும், உள்ளே இருந்தே ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் வேலைகளை செய்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.