Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?
டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை ராஜினாமா செய்யவுள்ள நிலையில் புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி மார்லெனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜாமினில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக ட்விஸ்ட் கொடுத்தார். கெஜ்ரிவால் பதவி விலகினால், டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக அதிஷி மார்லெனா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் கைது திகார் சிறையில் அடைத்தது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக இடைக்கால ஜாமீனில் வெளி வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால், இதன்பின்னர் செப்டம்பர் 13 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது.
இதனையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த பிறகு ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், மீண்டும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்றும் அறிவித்தார். மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு லோக்பால் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்ற முடியாத காரணத்தால், 49 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகியிருந்தேன் என்பது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும் என்றும் எனக்கு பதவியை விட கொள்கையே முக்கியம் என்றும் பேசினார்.
இந்நிலையில் இன்று கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதால், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய முதல்வர் பதவிக்கு மூத்த அமைச்சர் அதிஷி மார்லெனா பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். இதனையடுத்து அதிஷி மார்லெனா ஒருமனதாக, புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.