Atishi CM oath : கெஜ்ரிவாலுக்கு காலி CHAIR! பரதன் பாணியில் அதிஷி மீண்டும் ராமர் ஆட்சி
அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக ஒரு இருக்கையை ஒதுக்கி வைத்துவிட்டு டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் அதிஷி சிங். ராமர் வனவாசத்திற்கு சென்ற போது அயோத்தியை ஆட்சி செய்த பரதனோடு தன்னை ஒப்பிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார் அதிஷி.
புதிய மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் கைது திகார் சிறையில் அடைத்தது. ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக சொல்லி அதிரவைத்தார். மீண்டும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்றும் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். கெஜ்ரிவால் சிறையில் இருந்த போதும் கட்சியின் முக்கிய பொறுப்புகளை அவர்தான் கவனித்து வந்தார். இந்தநிலையில் டெல்லியின் முதலமைச்சராக இன்று அதிஷி பொறுப்பேற்றுக் கொண்டார். கல்வி, வருவாய், நிதி, மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட 13 இலாகாக்களை அதிஷி தன்வசம் வைத்துள்ளார்.
இன்று பொறுப்பேற்றுக் கொண்ட அதிஷி, அருகில் ஒரு இருக்கையை கெஜ்ரிவாலுக்கு ஒதுக்கிவிட்டு காலி இருக்கைக்கு அருகில் அமர்ந்தது கவனம் ஈர்த்தது.
இதுதொடர்பாக உருக்கமாக பேசிய அதிஷி, ‘இந்த இருக்கை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்தமானது. ராமர் வனவாசத்திற்கு சென்ற போது பரதன் எப்படி வலியுடன் அயோத்தியை ஆட்சி செய்தாரோ, அதே வலியுடன் தான் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன். அடுத்த 4 மாதங்களுக்கு நான் முதலமைச்சராக இருப்பேன். பிப்ரவரியில் நடக்கும் தேர்தலில் மக்கள் கெஜ்ரிவாலை மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் உறுதியாக இருக்கிறேன். அதுவரை அரவிந்த் கெஜ்ரிவாலின் இருக்கை இங்கேயே தான் இருக்கும்” என கூறியுள்ளார்.