Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!
முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தமிழிசையை அண்ணாமலை நேரில் சென்று சந்தித்துள்ளது பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழா மேடையில், தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து விரலை அசைத்து காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டித்த விவகாரத்தின் பிண்ணனியில், அண்ணாமலைக்கும் தமிழிசைக்கும் இடையே நிலவும் புகைச்சல் தான் காரணம் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் மேடையில் நடந்தது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் விளக்கமளித்த தமிழிசை “2024 தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆந்திராவில் சந்தித்தேன், அப்போது தேர்தலுக்கு பிந்தைய நிலை, மற்றும் தமிழகத்தில் நிலவும் சவால்கள் குறித்து அரிய அவர் என்னை அழைத்தார். நான் விவரிக்க முயன்ற போது, நேரம் குறைவாக இருந்ததால் என்னை தடுத்து நிறுத்திய மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் படி அறிவுறுத்தினார். பல தேவையற்ற யூகங்கள் உலாவி வரும் நிலையில், அதை தெளிவுபடுத்த இதை பதிவிடுகிறேன்” என்று தெரிவித்தார்.
இதன் மூலம் வேறு எந்த பிரச்சனையும் தமிழக பாஜகவில் இல்லை, அமித்ஷா தன்னை கண்டிக்கும் வகையில் எதுவும் சொல்லவில்லை என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தாலும், உண்மையில் இது தான் நடந்தது என்றால், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போதே இதை தெளிவுபடுத்தி இருக்கலாமே, ஏன் 40 மணி நேரம் காத்திருந்தார் தமிழிசை என்று கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதனால் இதன் மூலம் எண்ட் கார்ட் போட முடியாது, புகைச்சல் அடங்காது என்பதை உணர்ந்த பாஜக தலைமை தமிழிசை - அண்ணாமலை இருவரையும், சிரிப்புடன் சேர்ந்து இருப்பது போன்று போஸ் கொடுக்க சொல்லி உள்ளதாக தெரிகிறது.
விரைவில் இவர்கள் இருவரும் பாஜகவின் ஏதேனும் ஒரு பொது நிகழ்வில் பங்கேற்று நாங்க சுமூகமாக தான் இருக்கிறோம், எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று காட்டிகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழிசை சௌந்தரராஜனை, அண்ணாமலை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இந்தநிலையில் அண்ணாமலை தமிழிசை சௌந்தரராஜனை, நேரில் சென்று சந்தித்தாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்காதமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா அவர்களின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது.