ஸ்டாலின் - அண்ணாமலை சந்திப்பு! ஒரே விமானத்தில் பயணம்! பேசியது என்ன?
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினும், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் சந்தித்துள்ளனர். இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
கோவை அவினாசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதோடு சேர்த்து உலக புத்தொழில் மாநாடு, தங்க நகை தொழில் பூங்கா அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றை தொடங்கி வைப்பதற்காகவும் முதலமைச்சர் நேற்று கோவை வந்தார். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும் கோவையில் குவிந்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மதியம் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பினார். இந்தநிலையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கோவை விமான நிலையம் வந்திருந்தார். இருவரும் விமான நிலையத்தில் சந்தித்து பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது முதலமைச்சரின் ஸ்டாலினின் உடல்நிலை தொடர்பாக அண்ணாமலை விசாரித்ததாக சொல்கின்றனர். சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது உடல்நலம் பற்றி அண்ணாமலை விசாரித்ததாக கூறப்படுகிறது. இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு பிறகு ஒரே விமானத்தில் பயணம் செய்து சென்னை திரும்பியுள்ளனர்.
கடந்த 2 நாட்களாகவே கோவை விமான நிலையம் அரசியல் பரபரப்புடன் காணப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ம் நாமக்கலில் பிரச்சாரம் செய்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவரை வரவேற்க காத்திருந்த அதிமுகவினர், திமுக அமைச்சர்களை பார்த்ததும் எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டது பரபரப்பை கிளப்பியது. இந்தநிலையில் கோவை விமான நிலையத்தில் முதலமைச்சரும் அண்ணாமலையும் சந்தித்து பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.