
Annamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்
அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவியை தூக்கி கொடுத்து அவரை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கான வேலைகள் நடந்து வருவதாக சொல்கின்றனர். இதன் பின்னணியில் பாஜக சீனியர்களின் ஸ்கெட்ச் இருப்பதாகவும், மாநில அரசியலை விட்டு போக மாட்டேன் என அண்ணாமலை விடாப்பிடியாக இருப்பதாகவும் சொல்கின்றனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் அதிமுகவை இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில் அதற்கு முட்டுக்கட்டையாக அண்ணாமலை இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருக்கக் கூடாது அவரை நீக்கி விட்டு எங்களுடன் இணக்கமாக இருக்கும் ஒரு நபரைத் தான் பாஜக தலைவராக நியமிக்க வேண்டும் என்று அதிமுக கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.
இப்படி கூட்டணிக் கணக்கை கருத்தில் கொண்டு தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையை நீக்கி விட்டு அதிமுகவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கும் நயினார் நாகேந்திரனை பாஜக தலைவராக நியமிக்க டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பொறுப்பையும் வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதற்கு பின்னணியில் தமிழக பாஜக சீனியர்களின் ஸ்கெட்ச் இருப்பதாக சொல்கின்றனர்.
அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்த பின்னர் சீனியர் தலைவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தமிழக பாஜகவை தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக விமர்சனம் இருக்கிறது. தமிழிசை, பொன் ராதகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கடுப்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து டெல்லி தலைமையின் காதுகளுக்கும் புகாரை கொண்டு சென்றனர். இந்த நேரத்தில் அதிமுக கூட்டணி விவகாரம் மீண்டும் ஆரம்பித்தது தமிழக பாஜக சீனியர்களுக்கு ப்ளஸாக அமைந்தது. இதனை வைத்து அண்ணாமலையிடம் இருந்து மாநில தலைவர் பதவியை பிடுங்கிவிட்டு, தேசிய அரசியல் பக்கம் திருப்பிவிட்டால் தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது தங்களுடைய பேச்சு தான் எடுபடும் என கணக்கு போட்டுள்ளனர்.
அதேபோல் 2026 தேர்தலை குறிவைத்தும் தமிழ்நாட்டில் இருந்து ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் தேர்தல் நேரத்தில் கைகொடுக்கும் என்ற எண்ணமும் பாஜக தலைமைக்கு இருப்பதாக தெரிகிறது. ஆனால் மாநில அரசியல் தான் எனக்கு வேண்டும் என அண்ணாமலை பிடிவாதமாக இருப்பதாகவும் 2026 தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று டெல்லி தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
மற்றொரு பக்கம் அண்ணாமலையை மாநில அரசியிலில் இருந்து ஓரம் கட்டிவிட்டால் அது தங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு நன்மைபயக்கும் என்று சீனியர்கள் உள்ளடி வேலைகளை பார்த்து வருகிறார்கள். இதனால் பாஜக வட்டாரத்தில் 2 தரப்பாக பிரிந்து மோதல் நடந்து வருவதாக கூறப்படுகிறது.