Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?

Continues below advertisement

அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கின் குற்றவாளி ஞானசேகரன் திமுக நிர்வாகி என்ற திடுக்கிடும்  தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுவுடன் ஞானசேகரன் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். மேலும் இவர் மீது இதே போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தான் ஞானசேகரன் சென்னை சைதை பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா சுவுடன் ஞானசேகரன் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பதிவிட்டு எதிர்க்கட்சியினர் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த புகைப்படங்களை பகிர்ந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 
"அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது. 
1. ஒரு குற்றவாளி, தி.மு.க.வில் உறுப்பினராவதோடு, அந்தப் பகுதி திமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாகிறார்.
2. அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார்.
3. அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது.


தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. 
தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசே பொறுப்பு. 
எவ்வளவு காலம் தமிழக மக்கள் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போதாவது பொதுமக்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா?"
என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram