Anjalai Ammal Profile : தென்னிந்தியாவின் ஜான்சிராணி தவெக போற்றும் சிங்கப்பெண் அஞ்சலை அம்மாள்?

Continues below advertisement

தமிழ் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஒருவழியாக நடைபெற்று முடிந்துவிட்டது. த.வெ.க தலைவர் விஜய் உரையும் நிகழ்த்திவிட்டார். அரசியல் வழிகாட்டிகள் யார் என்பது குறித்து பேசுகையில், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர் கட்சியின் அரசியல் வழிகாட்டிகளாக இருப்பார்கள் என விஜய் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதில் விஜய் குறிப்பிட்ட அஞ்சலையம்மாள் யார் என தெரிந்துக்கொள்ளுங்கள்.

கடலூரில் 1890-ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி அம்மாக்கண்ணு - முத்துமணி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் அஞ்சலை அம்மாள். 1908-ம் ஆண்டு நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வந்த முருகப்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 5ம் வகுப்பு வரை மட்டுமே திண்ணைப்பள்ளியில் பயின்ற அஞ்சலை, பின்னர் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகள் குறித்து அறிந்துகொண்டார். இதனால் இயல்பிலேயே விடுதலை வேட்கை அவரது மனதில் குடிகொண்டிருந்தது. இதன் பின்னர் சென்னைக்கு இடம் மாறிய முருகப்பா-அஞ்சலை தம்பதி, தங்களின் சொத்துகளை விற்று விடுதலை போராட்டத்தில் பங்கேற்றனர்.
 
1921ம் ஆண்டில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தென்னிந்தியாவில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். 1927ம் நீல் சிலை அகற்றும் போராட்டத்தில் பங்கேற்று, சிலையை உடைத்ததாக கைது செய்யப்பட்ட அஞ்சலைக்கு ஆங்கிலேய அரசு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. அதே ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு வந்த காந்தி, அஞ்சலையின் மூத்த மகள் அம்மாக்கண்ணுவை, லீலாவதி என பெயர் மாற்றி தன்னுடன் குஜராத் அழைத்து சென்றார்.
 
1931ம் ஆண்டு கடலூரில் நடைபெற்ற உப்புசத்தியாகிரகத்தில் பங்கேற்ற அஞ்சலை கடுமையாக தாக்கப்பட்டு, 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். அப்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலை அம்மாள், சிறையில் இருந்து வெளியே வந்து குழந்தை பிறந்தபின்னர், 15 நாள் கைக்குழந்தையுடன் மீண்டும் சிறை சென்று தண்டனையை நிறைவு செய்தார். 1931ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்திற்கு அஞ்சலை தலைமை தாங்கினார்.
 
1934ம் ஆண்டு தமிழ்நாடு வந்த மகாத்மா காந்தி, அஞ்சலையை சந்திக்க விரும்பினார். ஆனால் அதற்கு ஆங்கிலேய அரசு தடை விதித்ததால், பர்தா அணிந்து வந்து காந்தியை சந்தித்தார். அவரது நெஞ்சுரத்தை பாராட்டி, அவரை தென்னிந்தியாவின் ஜான்சிராணி என காந்தி புகழாரம் சூட்டினார்.
 
1937, 1946, 1952 என 3 முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகக் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவிக்காலத்தின் போது, தீர்த்தம்பாளையம் குடிநீர் பிரச்சினையை தீர்க்க, வீராணம் கால்வாயிலிருந்து கிளை வாய்க்கால் வெட்டி தண்ணீர் பஞ்சம் தீர்த்தார். நாடு விடுதலை அடைந்த போது, அரசு வழங்கிய தியாகிகள் ஓய்வூதியத்தை வேண்டாம் என மறுத்தார்.
 
தனது இறுதிகாலத்தில் முட்லூர் கிராமத்தில் விவசாய பணிகள் மேற்கொண்டு வந்த அவர், 1961ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி காலமானார். அவரது பேரன் எழிலன் நாகநாதன் தற்போது சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram