’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மாவட்டம் சேரான்கோட்டை பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி அவரது பக்கத்து வீட்டு இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மாணவிக்கு அவர் அடிக்கடி தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி தனது தந்தையிடம் முனியராஜ் குறித்து புகார் கூறியுள்ளார். அதன்பேரில் மாணவியின் தந்தையும் அந்த இளைஞரை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியராஜ் அடுத்த நாள் மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் மாணவி சடலமாக கிடந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார் முனியராஜ். இதனையடுத்து மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றொர் கொலையாளியை கைது செய்து மரண தண்டனை கொடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறினார். அப்போது மாணவியின் தந்தை அமைச்சரிடம் கொலையாளிக்கு மரண தண்டனை வாங்கித் தருமாறு வலியுறுத்தினார். தொடந்து மாணவியின் சகோதரி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் அவருடனும் பேசிய அன்பில் ஆறுதல் கூறினார்.