Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து! எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான கோவை  அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்க மணி, விஜய பாஸ்கர் , வீர மணி உள்ளிட்டவர்களின் வீடுகளில் கடந்த காலங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக கடந்த 2016 முதல் 2022 ஆம் ஆண்டுவாக்கில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக  இருந்த அம்மன் அர்ஜுனன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். MLA அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் வருவாயைக் காட்டிலும் 2 கோடிக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கூடுதலாக குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியிருந்தது.


இந்த நிலையில், கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள அம்மன் அர்ஜுனனில் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நிறைவடைந்த பிறகு அவரின் வீட்டில் ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது தொடர்பான தகவல் வெளியாகும். தற்போது கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கும் அர்ஜுனன் முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. எஸ்.பி வேலுமணி வீட்டில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு செய்த நிலையில் தற்போது அவரது ஆதரவாளர் வீட்டில் ரெய்டு செய்து வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola