”விஜய்க்கு பாதுகாப்பு இருக்கா?” விளக்கம் கேட்கும் அமித்ஷா! மத்திய அரசின் ப்ளான் என்ன?
விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருக்கிறதா என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தவெக தலைவர் விஜய்க்கு நெருக்கடியாக மாறியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் விஜயை நோக்கி விமர்சனங்களை அடுக்கும் நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.
கரூர் பிரச்சனை ஆரம்பித்த அடுத்த நொடியில் இருந்தே தனது உள்துறை மூலம் கரூர் நிலவரத்தை விசாரித்து சொல்ல உத்தரவு விட்டாராம் அமித்ஷா. மேலும் கட்சி சார்பாக ஹேமாமாலினி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உள்ளடக்கிய குழு ஒன்றை அமைத்து கரூரில் விசாரணை செய்து ரிப்போர்ட் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
கரூரில் பிரச்சாரத்தில் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரமும் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நோக்கி இந்த விமர்சனங்கள் திரும்பிய நேரத்தில், ‘இது முற்றிலும் பொய், விஜயின் கவனத்தை ஈர்ப்பதற்காக யாராவது செருப்பை வீசியிருக்கலாம், மயக்கம் அடைந்தவர்கள் இருந்த இடத்தில் இருந்து தான் செருப்பு வீசப்பட்டுள்ளது” என பதிலடி கொடுத்தார்.
இந்தநிலையில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறதா என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வந்தவுடன் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. கரூர் சம்பவத்திலும் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக தவெகவினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில் இதுதொடர்பாக விசாரிக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக சொல்கின்றனர்.
சமீபத்தில் பல அடுக்கு பாதுகாப்பையும் மீறி விஜய் வீட்டு மாடிக்கு மர்ம நபர் ஒருவர் சென்றதும் பரபரப்பை கிளப்பியது. இதனை அடிப்படையாக வைத்தும் உள்துறை விவரங்களை சேகரித்து வருகிறது. இனிவரும் காலங்களில் விஜய் சுற்றுப்பயணம், கூட்டங்கள் நடத்துவதில் எந்த சிக்கலும் வராதபடி நடவடிக்கைகள் எடுக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. விஜய் தரப்பில் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர்.
கரூர் சம்பவத்தை வைத்து தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக திட்டமிடுவதாக எதிர் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.