நயினார் மகனுக்கு பதவி! வெளுத்தெடுத்த அலிஷா அப்துல்லா! ”அண்ணாமலைக்காக வந்தேன்”
நயினார் நாகேந்திரனின் மகனுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இஸ்லாமியர்களுக்கு இடமே இல்லை என போர்க்கொடி தூக்கியுள்ளார் அந்தக் கட்சியை சேர்ந்த அலிஷா அப்துல்லா. சாதி மத வேறுபாரு கூடாது என்ற அண்ணாமலையின் நோக்கத்துக்காகவே பாஜகவுக்கு வந்ததாக சொல்லியிருப்பது நயினார் ஆதரவாளர்களின் விமர்சனத்தில் சிக்கியுள்ளது.
தமிழக பாஜகவில் 25 அணிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். விருந்தோம்பல் பிரிவு, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, வர்த்தகர் பிரிவு, பொருளாதார பிரிவு உள்ளிட்டவற்றிற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் பொறுப்பு நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி கைகளுக்கு சென்றுள்ளது. நயினார் நாகேந்திரன் தலைவரானதும் தனது மகனிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதாக தமிழக பாஜகவினர் சிலர் அப்செட்டில் இருக்கின்றனர். ஏற்கனவே நயினார் நாகேந்திரன் தலைவரானதால் கடுப்பில் உள்ள அண்ணாமலை ஆதரவாளர்கள், மகனுக்கு பதவி கொடுத்துள்ளதால் சமூக வலைதளங்களிலேயே நேரடியாக கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்தநிலையில் பாஜகவில் இத்தனை ஆண்டுகளாக கடினமாக உழைத்தும் தனக்கு கிடைக்க வேண்டிய பதவி நயினார் பாலாஜிக்கு சென்றுவிட்ட கோபத்தில் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் அந்தக் கட்சியை சேர்ந்த அலிஷா அப்துல்லா. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘நான் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலைக்காக மட்டுமே பாஜகவில் இணைந்தேன். சாதி, மத வேறுபாடு இருக்கக் கூடாது என்ற அவர்களது பார்வை தெளிவாக இருந்தது. இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனையாகவும், கடினமாக உழைக்கக் கூடியவராகவும் இருந்து இந்த அறிவிப்பை பார்க்கும் போது வருத்தமளிக்கிறது. இந்த கட்சிக்காக 3 ஆண்டுகளாக இரவு பகலாக உழைத்துள்ளேன். ஆனால் கேசவ விநாயகம் 12 ஆண்டுகளாக இந்தக் கட்சிக்கு எதுவுமே செய்யவில்லை. கேசவ விநாயகத்திடம் எனது உழைப்பை முன்வைத்த போது அவர் என்னை கடந்து சென்று அவமானப்படுத்தினார். இதன்மூலம் பாஜகவில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. எனது 3வருட கடின உழைப்பு குப்பையில் வீசப்பட்டுள்ளது. 25 அணிக்கான அமைப்பாளர்களில் ஒரு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் கூட இல்லை” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரபல ரேசரும், சினிமா நடிகையுமான அலிஷா அப்துல்லா 2022ம் ஆண்டு அண்ணாமலை முன்பாக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் கட்சியில் இணைந்த போதே எனக்கு அண்ணாமலை அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாகவே பாஜகவில் இணைந்திருக்கிறேன் என சொல்லியிருந்தார். பாஜகவில் பொறுப்பு கிடைக்க தொடர்ந்து முயற்சித்தும், நயினார் தலைவரான பிறகு விளையாட்டு தொடர்பான பதவியை தனது மகனுக்கு கொடுத்துவிட்டதால் அலிஷா அப்துல்லா ஏமாற்றமடைந்துள்ளார்.